பொறையாறு அருகே காழியப்பநல்லூர் ஊராட்சியில் தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும் தி.மு.க மக்கள் கிராமசபை கூட்டத்தில் வலியுறுத்தல்


பொறையாறு அருகே காழியப்பநல்லூர் ஊராட்சியில் தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும் தி.மு.க மக்கள் கிராமசபை கூட்டத்தில் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 28 Dec 2020 10:29 AM IST (Updated: 28 Dec 2020 10:29 AM IST)
t-max-icont-min-icon

பொறையாறு அருகே காழியப்பநல்லூர் ஊராட்சியில் தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும் என்று தி.மு.க. மக்கள் கிராமசபை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

பொறையாறு,

நாகை மாவட்டம் பொறையாறு அருகே காழியப்பநல்லூர் ஊராட்சியில் தி.மு.க. சார்பில் மக்கள் கிராமசபை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு செம்பனார்கோவில் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் அப்துல்மாலிக் தலைமை தாங்கினார்.

மாநில பொதுக்குழு உறுப்பினர் கலைச்செல்வி ஜெயராமன், ஒன்றிய துணைச் செயலாளர் துளசிரேகா ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய பொருளாளரும் ஊராட்சி மன்ற தலைவருமான கருணாநிதி வரவேற்று பேசினார்.

தீர்மானங்கள்

அதனைத் தொடர்ந்து கூட்டத்தில், காழியப்பநல்லூர் ஊராட்சியில் கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பகுதி நேர அங்காடி திறக்க வேண்டும், ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்க வேண்டும். அனைத்து கிராம சாலைகளை தார் சாலைகளாக செப்பனிட்டு தரவேண்டும், ஊராட்சியில் தங்கு தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதனை தொடர்ந்து கூட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிய ஆட்சி அமைய அனைவரும் பாடுபட வேண்டும் என உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

கூட்டத்தில் அவைத் தலைவர் மனோகரன், மாவட்ட மகளிரணி நிர்வாகி சியாமளாபாஸ்கர், மாவட்ட பிரதிநிதிகள் டாக்டர் மணிமாறன், இளங்கோ உள்ளிட்ட தி.மு.க நிர்வாகிகள், மகளிர் அணியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

முடிவில் ஒன்றிய துணைச் செயலாளர் ஆனந்தன் நன்றி கூறினார்.

திருக்கடையூர்

திருக்கடையூர் ஊராட்சியில் தி.மு.க சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் அப்துல்மாலிக் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி சிவராஜ், ஒன்றிய துணைத் தலைவர் மைனர்பாஸ்கர், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கவுன்சிலர் துளசிரேகா ரமேஷ் வரவேற்று பேசினார். இதில் தி.மு.க. பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் திருக்கடையூர் ஊராட்சியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி புதிதாக அரசு மருத்துவமனை கட்ட வேண்டும். மயிலாடுதுறை, தரங்கம்பாடி, திருக்கடையூர் வழியாக 1986-ம் ஆண்டு நிறுத்தப்பட்ட பயணிகள் ரெயில் சேவை மீண்டும் தொடங்க வேண்டும். திருக்கடையூர் ஊராட்சியில் அனைத்து தெருக்களிலும் தார்சாலை அமைத்து தரவேண்டும்.

மனைப்பட்டா வழங்க வேண்டும்

திருக்கடையூர் மற்றும் ஊராட்சியில் உள்ள அபிஷேககட்டளை, சரபோஜிராஜபுரம், பிச்சை கட்டளை, ஓடக்கரை, சிங்கநோடை, சீவகசிந்தாமணி. உலகமாதேவி, பெருமாள் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்கள் கோவில் இடத்தில் வசிக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் மனைப்பட்டா வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. அருள்செல்வன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எழில்நம்பி, நாகை மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் தேசப்பன், தில்லையாடி ஊராட்சி மன்ற தலைவர் ரெங்கராஜ், மாவட்ட பிரதிநிதி மணிமாறன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story