ஆண்டிப்பட்டி பகுதியில் ஜல்லிக்கட்டில் மல்லுக்கட்ட தயாராகும் காளைகள்
ஆண்டிப்பட்டி பகுதியில் ஜல்லிக்கட்டு விழாவிற்காக காளைகளை அவற்றின் உரிமையாளர்கள் தயார்படுத்தி வருகின்றனர்.
ஆண்டிப்பட்டி,
தமிழரின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு, ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை, தேனி, திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்படுவது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக வருகிற பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு கட்டுப்பாடுகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு உள்பட பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு விழாவிற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதையொட்டி மாடுபிடி வீரர்களும் தயாராகி வருகின்றனர். அதேபோல் காளைகளை அவற்றின் உரிமையாளர்கள் தயார்படுத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டத்தை பொறுத்தவரையில் அய்யம்பட்டி, பல்லவராயன்பட்டி, சின்னமனூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. இதில் மதுரை, திண்டுக்கல், தேனி உள்பட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காளைகள் அழைத்து வரப்பட்டு, போட்டிகளில் பங்கேற்க செய்வார்கள். அதேபோல் ஏராளமான மாடுபிடி வீரர்களும் வருவார்கள்.
இதையடுத்து ஜல்லிக்கட்டு விழாவை முன்னிட்டு ஆண்டிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான திம்மரசநாயக்கனூர், குன்னூர், ஏத்தக்கோவில், டி.ராஜகோபாலன்பட்டி உள்பட பல்வேறு கிராமங்களில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பிரத்யேக பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி காளைகளுக்கு மண் குவியலை கொம்புகளால் முட்டும் பயிற்சி, நீளமான கயிறுகளில் காளையை கட்டி முட்டும் பயிற்சி மற்றும் நீச்சல் பயிற்சி ஆகிய பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மாதிரி வாடிவாசல் அமைத்து அதன் வழியாக காளைகளை ஓடவிட்டும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதேபோல் மாடுபிடி வீரர்களும் தங்களை தயார்படுத்தி வருகின்றனர். அவர்களும் ஓட்டப்பயிற்சி, நீச்சல் பயிற்சி உள்ளிட்டவற்றை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து ஆண்டிப்பட்டியை சேர்ந்த மாடுபிடி வீரர்கள் சிலர் கூறுகையில், தேனி மாவட்டத்தில் காங்கேயம், தேனி மலைமாடு உள்பட 8 வகையான ஜல்லிக்கட்டு காளைகள் அதிக அளவில் வளர்க்கப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் ஜல்லிக்கட்டுக்காக காளைகளை தயார்படுத்தி வருகிறோம். நாங்களும் காளைகளை அடக்குவதற்காக வியூகங்களை கற்று வருகிறோம். தேனி மாவட்டத்தை சேர்ந்த ஜல்லிக்கட்டு காளைகள் பல்வேறு இடங்களில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை அள்ளின. அதேபோல் வருகிற போட்டிகளிலும் பரிசுகளை குவிக்கும். நாங்களும் பல்வேறு இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க உள்ளோம் என்றனர்.
Related Tags :
Next Story