ஊரக புறக்கடை கோழி வளர்ப்பு திட்டத்தில் 5,200 பெண்களுக்கு கோழிக்குஞ்சுகள் அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கி தொடங்கி வைத்தார்
கடலூர் மாவட்டத்தில் ஊரக புறக்கடை கோழி வளர்ப்பு திட்டத்தில் 5 ஆயிரத்து 200 பெண்களுக்கு கோழிக்குஞ்சுகளை அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கி தொடங்கி வைத்தார்.
கடலூர்,
கடலூர் புதுப்பாளையம் கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் அலுவலகத்தில், 2020-21-ம் ஆண்டுக்கு கால்நடை பராமரிப்புத்துறைமூலம் ஊரக புறக்கடை கோழி வளர்ப்புத்திட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் 5 ஆயிரத்து 200 ஏழை எளிய பெண் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, நபர் ஒருவருக்கு 1 மாத வயதுடைய 25 நாட்டின கோழி குஞ்சுகள் மற்றும் 49 கிராமங்களில் 6 ஆயிரத்து 669 பயனாளிகளுக்கு தலா 4 ஆடுகள் வீதம் 26 ஆயிரத்து 676 விலையில்லா வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் வழங்கும் திட்ட தொடக்க விழா நடந்தது.
விழாவுக்கு மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கினார். விழாவில் அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு கோழிக்குஞ்சுகள், வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளை வழங்கி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கடலூர் மாவட்டத்தில் விலையில்லா செம்மறி மற்றும் வெள்ளாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 2020-2021-ம் ஆண்டில் ரூ.8 கோடியே 52 லட்சத்து 6 ஆயிரம் மதிப்பீட்டில் 49 கிராமங்களுக்கு 6 ஆயிரத்து 669 பேருக்கு 26,676 வெள்ளாடுகள் வழங்கப்பட்டுள்ளன. ஊரக புறக்கடை கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் 2020-2021-ம் ஆண்டில் ரூ.10 கோடியே 3 லட்சத்து 2 ஆயிரம் மதிப்பீட்டில் 5 ஆயிரத்து 200 ஏழை பெண்களுக்கு தலா 25 நாட்டுக் கோழிகள் வீதம் மொத்தம் 1 லட்சத்து 30 ஆயிரம் கோழிகள் வழங்கப்பட உள்ளன.
என்.ஏ.டி.பி. திட்டத்தின் கீழ் 2020-21-ம் ஆண்டில் 33 பயனாளிகளுக்கு நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் 50 சதவீத மானியமாக ரூ.75 ஆயிரம் பயனாளிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் நோய் பாதிக்காத வண்ணம் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 808 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, இது நாள் வரை 2 லட்சத்து 9 ஆயிரத்து 763 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அமைச்சர் எம். சி. சம்பத் கூறினார்.
விழாவில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் குபேந்திரன், உதவி இயக்குனர் கஸ்தூரி, கடலூர் ஒன்றியக்குழு தலைவர் தெய்வ.பக்கிரி மற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story