வேலூர் மாவட்டத்தில் தேசிய திறனாய்வு தேர்வை 1,511 மாணவர்கள் எழுதினர்


வேலூர் மாவட்டத்தில் தேசிய திறனாய்வு தேர்வை 1,511 மாணவர்கள் எழுதினர்
x
தினத்தந்தி 28 Dec 2020 9:24 PM IST (Updated: 28 Dec 2020 9:24 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் நடந்த தேசிய திறனாய்வு தேர்வை 1,511 மாணவர்கள் எழுதினார்கள். தேர்வு மையங்களை மாவட்ட கல்வி அலுவலர் அங்குலட்சுமி பார்வையிட்டார்.

வேலூர், 

தமிழகத்தில் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய திறனாய்வு தேர்வு நேற்று நடைபெற்றது. காலை 9 முதல் 11 மணி வரை மனத்திறன் தேர்வும், 11.30 முதல் 1.30 மணி வரை படிப்பறிவு தேர்வும் நடந்தது.

வேலூர் மாவட்டத்தில் இந்த தேர்வை எழுத 1,589 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். அவர்கள் தேர்வு எழுத வேலப்பாடி, கொசப்பேட்டை, காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தொரப்பாடி, கணியம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி, பொய்கை, அணைக்கட்டு, கே.வி.குப்பம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட 17 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் காலை 8 மணி முதல் வரத்தொடங்கினர். சோதனைக்கு பின்னர் 8.30 மணி அளவில் தேர்வு அறைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். செல்போன், கால்குலேட்டர், எலக்ட்ரானிக் கைக்கெடிகாரம் உள்ளிட்டவை கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. அனைத்து மாணவர்களும் முகக்கவசம் அணிந்திருந்தனர்.

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக ஒரு அறையில் 10 பேர் அமர்ந்து தேர்வு எழுதினர். தேசிய திறனாய்வு தேர்வை 1,511 மாணவ-மாணவிகள் எழுதினர். 78 பேர் பங்கேற்கவில்லை.

வேலூர் கொசப்பேட்டையில் உள்ள ஈ.வெ.ரா. நாகம்மை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட பல்வேறு தேர்வு மையங்களை வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் அங்குலட்சுமி பார்வையிட்டார்.தேர்வு அறை மற்றும் மையங்களை கண்காணிக்கும் பணியில் 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட்டிருந்தனர். தேர்வு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


Next Story