திருப்பத்தூர் அருகே சனி பகவானுக்கு சிறப்பு வழிபாடு பக்தர்கள் தரிசனம்


திருப்பத்தூர் அருகே சனி பகவானுக்கு சிறப்பு வழிபாடு பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 28 Dec 2020 9:40 PM IST (Updated: 28 Dec 2020 9:40 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் அருகே சனிப்பெயர்ச்சியையொட்டி சனி பகவானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருப்பத்தூர்,

2½ ஆண்டுகளுக்கு ஒருமுறை சனிப்பெயர்ச்சி நடைபெறும். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு சனிப்பெயர்ச்சி இடம் பெறுவதால் 12 ராசிதாரர்களுக்கும் பல்வேறு பலன்கள் கிடைக்கும். அதன்படி 2½ ஆண்டுகளுக்கு பிறகு நேற்று அதிகாலை 5.22 மணிக்கு தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு சனிபகவான் இடம் பெயர்ந்தார்.

இதையொட்டி சனி பகவான் கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. நவக்கிரக சன்னதியில் உள்ள சனிபகவானுக்கு நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது.

திருப்பத்தூர் அருகே பெரிச்சிக்கோவிலில் சுகந்தவனேசுவரர் கோவிலில் வன்னிமரத்தடியில் ஒற்றை சனீஸ்வரர் எழுந்தருளி உள்ளார்.

நேற்று சனிப்பெயர்ச்சியையொட்டி சனீஸ்வரருக்கு பால்,சந்தனம், மஞ்சள், தயிர் உள்ளிட்ட 16 விதமான திரவியங்களாலும், யாகம் செய்யப்பட்ட புனித நீராலும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் சனீஸ்வரர் வெள்ளி அங்கி அணிந்து சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் நல்லிப்பட்டி கிராமத்தில் உள்ள சவுந்தரநாயகி உடனமர் நல்லூர்ஆண்டவர் கோவிலில் தனி சன்னதியில் அருள்பாலிக்கும் சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன.

இதில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.பெரியகருப்பன், துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்ரகு, ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் திரளான பக்தர்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக 12 ராசிக்காரர்களும் பெயர், நட்சத்திரம் ஆகியவற்றை பதிவு செய்து நற்பலன் குறித்து பரிகார பூஜை செய்து வழிபட்டனர். பெண்கள் சனீஸ்வரர் சன்னதிக்கு முன்பு எள் தீபம் ஏற்றி வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை நல்லிப்பட்டி கிராமத்தினர் செய்திருந்தனர்.

இதே போல குறிச்சி வழிவிடு பெரியநாச்சி அம்மன்கோவிலில் சனிபெயர்ச்சியொட்டி மகாயாகம் நடந்தது. 9 கும்ப கலச பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பரிகார பூஜை செய்து சனீஸ்வரரை வழிபட்டனர்.

எஸ்.புதூர் அருகே கரிசல்பட்டியில் கைலாசநாதர் கோவிலில் உள்ள நவக்கிரக சனி பகவானுக்கு சனிப்பெயர்ச்சியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.

Next Story