குட்டை போல காட்சியளிக்கும் ஆதனி கண்மாய் 7-ந்தேதி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட விவசாயிகள் முடிவு


குட்டை போல காட்சியளிக்கும் ஆதனி கண்மாய் 7-ந்தேதி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட விவசாயிகள் முடிவு
x
தினத்தந்தி 28 Dec 2020 9:47 PM IST (Updated: 28 Dec 2020 9:47 PM IST)
t-max-icont-min-icon

பெரியாறு தண்ணீர் திறந்தும் மழைநீர் குட்டை போல ஆதனி கண்மாய் காட்சியளிக்கின்றன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.

சிவகங்கை,

பெரியாறு தண்ணீர் திறக்கக்கோரி 7-ந்தேதி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட விவசாயிகள் முடிவு செய்து உள்ளனர்.
5 மாவட்ட விவசாயிகள் சங்கத்தின் தலைவர் எஸ்.ஆர். தேவர், ஒருங்கிணைப்பாளர்கள் அன்வர் பாலசிங்கம்,மேலப்பூங்குடி ஆதிநாராயணன், திருமலை முத்துராமலிங்கம், அய்யனார், சோழபுரம் மாரி உள்ளிட்டவர்கள் கள்ளராதினிபட்டி ஆதனி கண்மாயில் நிருபர்களிடம் கூறியதாவது:-

சிவகங்கை மாவட்ட பெரியாறு பாசன பகுதிக்கு விவசாயத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று 5 மாவட்ட விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஏற்கனவே கோரிக்கை வைத்திருந்தோம். இதற்காக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினோம். அப்போது நடைபெற்ற பேச்சு வார்த்தையில் தண்ணீர் திறந்து விடுவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை பெரியாறு தண்ணீர் மூலம் லெஸ்சிஸ் கால்வாய், கட்டாணிபட்டி 1-வது கால்வாய் மற்றும் 2-வது கால்வாய், 48-வது மடை வாய்க்கால் சீல்டு கால்வாய் வழியாக 129 கண்மாய்கள் தண்ணீர் நிரம்பும். இதன்மூலம் சுமார் 6 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். ஆனால் தற்போது திறந்து விடப்பட்ட பெரியாற்று தண்ணீரால் எந்த கண்மாயும் நிரம்பவில்லை.

ஆதனி கண்மாய் தான் சீல்டு கால்வாயின் முதல் கண்மாய். இதன் மூலம் 100 ஏக்கர் பாசன வசதி பெறும். இதில் 40 ஏக்கர் மதுரை மாவட்டமும் மீதியுள்ள 60 ஏக்கர் சிவகங்கை மாவட்டமும் பயன் பெறும். தற்போது இந்த கண்மாய்க்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் ஒரு ஓரத்தில் குளம் போல தேங்கி நிற்கிறது. ஆனால் அதிகாரிகள் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 129 கண்மாய்களில் 76 கண்மாய்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதாக தவறான தகவலை கூறுகின்றனர். மேலும் சீல்டு கால்வாயில் 40 கன அடி தண்ணீர் விடப்படுவதாக கூறியுள்ளனர். ஆனால் தற்போது இதில் 15 கனஅடி தான் தண்ணீர் வருகிறது. இது போல தவறான தகவலை தந்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

எனவே வருகிற 7-ந்தேதி உரிய பங்கீட்டின்படி தண்ணீர் திறந்துவிடக்கோரியும் தவறான தகவலை தந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் பெரியாறு பாசன விவசாயிகளின் சார்பில் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

அப்போது நிருபர்களிடம் ஆதனி கண்மாயை பாருங்கள் என்று விவசாயிகள் சுட்டி காட்டினார்கள். மழை பெய்த தண்ணீர் போல குட்டை போல பெரியாறு தண்ணீர் ஆதனி கண்மாயில் இருக்கிறது. இந்த தண்ணீரை கொண்டு எப்படி விவசாயம் செய்ய முடியும் என கேள்வி எழுப்பினர். பெயருக்காக தண்ணீர் வழங்காமல் சாகுபடிக்காக தண்ணீர் வழங்க கோரி தான் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட உள்ளோம் என்றனர்.

76 கண்மாய்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு உள்ளது
கலெக்டர் விளக்கம்
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

மதுரை மற்றும் சிவகங்கை மாவட்ட ஒரு போக பாசன ஆயக்கட்டு பகுதிகளுக்கு வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்க முதல்-அமைச்சர் ஆணையிட்டார். அதன் அடிப்படையில் கடந்த 27.9.2020 அன்று வைகை அணையிலிருந்து மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டத்திற்கு 85,563 ஏக்கர் நிலங்களுக்கு 900 கன.அடி வீதம் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தின் ஒரு போக ஆயக்கட்டு பாசன பகுதி 6038.53 ஏக்கர் ஆகும். வைகை அணையிலிருந்து 85,563 ஏக்கர் பாசன விளைநிலங்களுக்கான திறக்கப்படும் 900 கன.அடி தண்ணீர் சிவகங்கை மாவட்ட பாசன பரப்பான 6038.53 ஏக்கருக்கு கணக்கீட்டின்படி 63.52 கன.அடி ஆகும்.

முதல் 45 நாட்கள் தண்ணீர் அளிக்கப்பட்டு வந்த நிலையில் வைகை அணை மற்றும் பெரியாறு அணையின் நீர் இருப்பை கருத்தில் கொண்டு 17.11.2020 முதல் முறை பாசனம் 5 நாட்களுக்கு நீர் திறப்பும் மற்றும் 5 நாட்களுக்கு நீர் அடைப்புமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.

2-வது முறை பாசனம் 27.11.2020 அன்றும், 3-வது முறை பாசனம் 12.12.2020 அன்றும் வைகை அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டது. 4-வது முறை பாசனத்தில் தற்போது 25.12.2020 அன்று வைகை அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டு 26.12.2020 அன்று மதியம் 2.00 மணியளவில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சீல்டு கால்வாய்க்கு 40 கன அடி வீதமும், லெஸ்ஸீஸ் கால்வாய்க்கு 40 கன அடி வீதமும் மற்றும் கட்டாணிபட்டி 2-வது மடை வாய்க்காலுக்கு 5 கன அடி வீதம் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இதில் லெஸ்ஸிஸ் கால்வாயில் 32 கண்மாய்களும், கட்டாணிப்பட்டி 1-வது கால்வாய் மூலம் 36 கண்மாய்களும் கட்டாணிப்பட்டி 2-வது கால்வாய் மூலம் 8 கண்மாய்களும் 48-வது மடை வாய்க்கால் மூலம் 19 கண்மாய்களும் சீல்டு கால்வாய் மூலம் 34 கண்மாய்களும் சேர்த்து மொத்தம் 129 கண்மாய் உள்ளன.இதில் 76 கண்மாய்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story