ஆவடியில் வீட்டுக்கு மின்இணைப்பு வழங்க ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது; லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி


ஆவடியில் வீட்டுக்கு மின்இணைப்பு வழங்க ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது; லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி
x
தினத்தந்தி 29 Dec 2020 2:19 AM IST (Updated: 29 Dec 2020 2:19 AM IST)
t-max-icont-min-icon

வீட்டுக்கு மின்இணைப்பு வழங்க ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

வீட்டுக்கு மின் இணைப்பு
ஆவடியை அடுத்த அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிப்பவர் ஞானகனி (வயது 49). இவர், தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து அதே பகுதியில் டியூசன் சென்டர் நடத்தி வருகிறார்.

இவரது வீட்டின் மாடியில் உள்ள வீட்டுக்கு தனியாக மின்இணைப்பு வழங்கும்படி அயப்பாக்கம் ஐயப்பன் நகர் விநாயகர் கோவில் தெருவில் உள்ள மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகத்தில் மனு செய்து இருந்தார்.

ரூ.7 ஆயிரம் லஞ்சம்
அதற்கு மின்வாரிய அதிகாரியான செங்குன்றத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணி (39) என்பவர் ரூ.7 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் மின்இணைப்பு வழங்குவதாக கூறினார்.

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ஞானகனி, இதுகுறித்து சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். மின்வாரிய அதிகாரியை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை ஞானகனியிடம் கொடுத்து அதனை லஞ்சமாக பாலசுப்பிரமணியிடம் கொடுக்கும்படி அறிவுறுத்தி அனுப்பினர்.

கைது
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி. பாஸ்கரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் மலர்கொடி உள்ளிட்ட போலீசார் நேற்று மதியம் அயப்பாக்கத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் மறைந்து இருந்தனர். ஞானகனி, ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை லஞ்சமாக பாலசுப்பிரமணியிடம் கொடுத்தார். அதை அவர் ைகயில் வாங்கியதும், அங்கு மறைத்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பாய்ந்து சென்று மின்வாரிய அதிகாரி பாலசுப்பிரமணியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

Next Story