மும்பையில் ரெயிலை நிறுத்தி தண்டவாளத்தில் கிடந்தவரை மீட்ட பெண் போலீஸ்; அதிகாரிகள் பாராட்டு
ரெயிலை நிறுத்தி தண்டவாளத்தில் மயங்கி கிடந்தவரை மீட்ட பெண் போலீசை அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்.
தண்டவாளத்தில்மயங்கி கிடந்தார்
மும்பை பார்சி காலனியை சேர்ந்தவர் இராணி கைஜிகாத் (வயது46) . இவர் சம்பவத்தன்று கிராண்ட் ரோடு பிளாட்பாரம் நம்பர் 1-ம் பகுதியில் தண்டவாளத்தை கடந்து உள்ளார். அப்போது ஏற்பட்ட திடீர் மயக்கம் காரணமாக தண்டவாளத்தில் விழுந்து கிடந்தார்.
இதனை கண்ட அங்கிருந்த ரெயில்வே பாதுகாப்பு படை பெண் போலீஸ் லதா பன்சோலே ரெயில் வரும் முன்பு அவரை காப்பாற்ற ஓடிச்சென்றார். தண்டவாளத்தில் குதித்து மயங்கி கிடந்த இராணி கைஜிகாத்தை மீட்க முயன்றார்.
ரெயிலை நிறுத்தி மீட்பு
இதற்கிடையில் அந்த வழித்தடத்தில் மின்சார ரெயில் வந்ததால் கையை அசைத்து சிக்னல் காட்டினார். இதனை கண்ட மோட்டார் மேன் உடனடியாக ரெயிலை நடுவழியிலேயே நிறுத்தினார். பின்னர் மற்ற பயணிகளின் உதவியுடன் அவரை மீட்டு பிளாட்பாரத்திற்கு தூக்கி வந்தார். இதன்பின்னர் ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.
ரெயில் விபத்தில் சிக்க இருந்தவர் மீட்கப்பட்டதை தொடர்ந்து அவர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது பற்றி அறிந்த ரெயில்வே போலீஸ் உயர் அதிகாரிகள் துணிச்சலுடன் போராடி பயணியின் உயிரை காப்பாற்றிய பெண் போலீஸ் லதா பன்சோலேவை வெகுவாக பாராட்டினர்.
Related Tags :
Next Story