மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தான் புதுவை மாநிலம் காக்கப்படும் நாராயணசாமி பேச்சு


மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தான் புதுவை மாநிலம் காக்கப்படும் நாராயணசாமி பேச்சு
x
தினத்தந்தி 29 Dec 2020 8:03 AM IST (Updated: 29 Dec 2020 8:03 AM IST)
t-max-icont-min-icon

வரும் தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தான் புதுவை மாநிலம் காக்கப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி,

காங்கிரஸ் கட்சியின் 136-வது ஆண்டு தொடக்க விழா புதுவை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். காங்கிரஸ் கொடியை ஏற்றிவைத்து தலைவர்களின் உருவப் படங்களுக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்று காமராஜர், காந்தி சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். ஊர்வலத்தில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக பதாகைகளை கைகளில் ஏந்திச் சென்றனர்.

அப்போது முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

வளர்ச்சிக்கு குந்தகம்

காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் என்று சொல்லிக்கொள்வதில் நமக்கெல்லாம் பெருமை. நாடு நன்றாக இருக்கவேண்டும் என்று பாடுபட்ட இயக்கம் காங்கிரஸ். தமிழகத்தில் நாம் நெடுநாட்களாக ஆட்சிக்கு வராவிட்டாலும் கிராமத்தில் ஒவ்வொருவரின் வீட்டிலும் நேரு, இந்திராகாந்தியின் படம் உள்ளது.

புதுவையில் பலமுறை நாம் ஆட்சியில் இருந்துள்ளோம். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது மாநிலத்துக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம். ஆனால் இப்போது புதுவை வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கிறார்கள். என்.ஆர்.காங்கிரசும், அ.தி.மு.க.வும் கவர்னர் கிரண்பெடியின் செயல்பாட்டிற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. இதை நாம் மக்களிடம் எடுத்துச் சொல்லவேண்டும். மக்களுக்கு இலவச அரிசி, நிவாரணம் கொடுப்பதை எல்லாம் கவர்னர் தடுக்கிறார்.

விவசாயிகள் பிரச்சினை

நமது ஆட்சியில் என்ன செய்துவிட்டோம்? என்று சிலர் கேட்கிறார்கள். அருகே இருக்கும் நகராட்சி கட்டிடம், அரும்பார்த்தபுரம் மேம்பாலம், 100 அடி ரோடு மேம்பாலம் போன்றவற்றை கட்டி உள்ளோம். காமராஜர் மணிமண்டபத்தை விரைவில் திறக்க உள்ளோம்.

பிரதமர் இப்போது ஜனநாயகத்தைப்பற்றி பேசுகிறார். ஒரே நாடு ஒரே ரேசன்கார்டு என்கிறார். விவசாயிகளின் போராட்டம் எதிர்க்கட்சிகள் சதி, பாகிஸ்தான் சதி என்று கூறுகிறார். 1½ கோடி விவசாயிகள் போராட்டம் நடத்தும் நிலையில் அவர்களை சந்தித்து பேசாமல் அம்பானியின் பேரனை சென்று பார்க்கிறார். விவசாய பொருட்களுக்கு விலை உத்தரவாதத்தை அவர் கொடுக்கவில்லை.

உள்ளாட்சி தேர்தல்

புதுவையில் பஞ்சாயத்து தேர்தலைப்பற்றி பேசுகிறார். கடந்த 2014-ம் ஆண்டு மோடி பிரதமர் ஆனார். அப்போது புதுவையில் அவர்களது கூட்டணி கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் தான் இருந்தது. அப்போது தேர்தல் நடத்தாமல் எங்கே போனீர்கள்?

உள்ளாட்சி தேர்தலை நடத்த நாங்கள் சட்டமன்றத்தின் மூலம் பாரதீய ஜனதா உள்ளிட்ட அனைத்து கட்சிகள் ஆதரவுடன் பாலகிரு‌‌ஷ்ணன் என்பவரை மாநில தேர்தல் ஆணையராக நியமனம் செய்தோம். ஆனால் அதையும் மீறி ஓய்வுபெற்ற வனத்துறை அதிகாரியை மாநில தேர்தல் ஆணையராக கவர்னர் நியமித்தார்.

கிரண்பெடிதான் காரணம்

தேர்தல் ஆணைய விதிப்படி வனத்துறை அதிகாரிகளை தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கக்கூடாது. இந்தநிலையில் அவருக்கு அடுத்தபடியாக போட்டியில் இருந்தவர் இந்த நியமனத்தை எதிர்த்து கோர்ட்டுக்கு சென்றுள்ளார். புதுவையில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததற்கு கவர்னர் கிரண்பெடிதான் காரணம். அவரை வைத்துக்கொண்டு ஜனநாயகம் பற்றி பிரதமர் பேசுகிறார்.

கவர்னர் ஜனநாயக முறைப்படிதான் நடக்கிறாரா? உள்ளாட்சி தேர்தலை பார்ப்பதுதான் பிரதமர் வேலையா? புதுவை மக்களின் உரிமைகள் பறிக்கப்படுகிறது. எனவே நாம் இன்னொரு சுதந்திர போராட்டத்துக்கு தயாராக வேண்டும்.

மாநிலம் காக்கப்படும்

என்மீது 10 புகார்களை சி.பி.ஐ.யிடம் கவர்னர் கிரண்பெடி கொடுத்தார். எனக்கு பதவி முக்கியமல்ல. புதுச்சேரி மக்களுக்காக சிறை செல்லவும் தயார். சனீஸ்வரன் கோவில் விவகாரத்தில் கவர்னர் தலையிட்டதால் பிரச்சினை. கவர்னருக்கு எதிராக பா.ஜ.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டன. இறுதியில் கோர்ட்டு நல்ல உத்தரவினை வழங்கியது.

இப்போது காங்கிரஸ் கட்சிக்காரர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை என்பதை மறுப்பதற்கில்லை. வரும் தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்தான் புதுவை மாநிலம் காக்கப்படும். இல்லாவிட்டால் ஜம்மு கா‌‌ஷ்மீர் போன்றோ? தமிழகத்தோடோ இணைத்துவிடுவார்கள்? யார் தலைமை என்பது முக்கியமல்ல.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் காங்கிரஸ் மேலிட பார்வையாளர் சஞ்சய்தத், அமைச்சர்கள் கந்தசாமி, ‌ஷாஜகான், கமலக்கண்ணன், வைத்திலிங்கம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், ஜெயமூர்த்தி, ஜான்குமார், நிர்வாகிகள் தேவதாஸ், நீல.கங்காதரன், ஏ.கே.டி.ஆறுமுகம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story