நூற்பாலையில் இருந்து வெளியேறும் பஞ்சு துகள்களால் நோய் பரவுகிறது கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் புகார்


நூற்பாலையில் இருந்து வெளியேறும் பஞ்சு துகள்களால் நோய் பரவுகிறது கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் புகார்
x
தினத்தந்தி 29 Dec 2020 11:28 AM IST (Updated: 29 Dec 2020 11:28 AM IST)
t-max-icont-min-icon

லக்காபுரம் பகுதியில் உள்ள நூற்பாலையில் இருந்து வெளியேறும் துகள்களால் நோய் பரவுகிறது என்று கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் மனு கொடுத்தனர்.

ஈரோடு,

தமிழ் புலிகள் கட்சியின் மகளிர் அணி மாவட்ட செயலாளர் பிரபாவதி தலைமையில் மத்திய மாவட்ட செயலாளர் சிந்தனை செல்வன் மற்றும் நிர்வாகிகள் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-

தமிழகத்தில் மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும் என்று எங்கள் கட்சி சார்பில் பல்வேறு போராட்டங்களை நாங்கள் நடத்தி வருகிறோம். இந்த நிலையில் ஈரோடு இடையன்காட்டு வலசு, பவானி, நசியனூர், திண்டல் ரிங் ரோடு உள்பட மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஓட்டல்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் சில ஓட்டல்களில் குடும்ப உணவகங்கள் என்று வெளியில் பெயர் பலகை வைக்கப்பட்டு, உள்ளே மது அருந்த அனுமதியும், மதுவிற்பனையும் நடைபெற்று வருகிறது.

மேலும் சில உணவு விடுதிகளில் சுண்டு காசு என்ற புதுவகை சூதாட்டமும் தற்போது நடைபெறுகிறது. இதனால் பலர் பணத்தை இழந்து வருகிறார்கள். எனவே மது அருந்த அனுமதிக்கும் மற்றும் சூதாட்டம் நடத்திவரும் குறிப்பிட்ட ஓட்டல்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.

பஞ்சு துகள்கள்

லக்காபுரம் அருகே உள்ள முத்துக்கவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-

எங்கள் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியை சேர்ந்த ஒருவர் தனது தோட்டத்தில் மில் ஒன்றை கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். இந்த மில்லை தனியார் ஒருவர் வாடகைக்கு எடுத்து பஞ்சில் இருந்து நூல் தயாரித்து வருகிறார். இதனால் மில்லில் இருந்து கழிவு பஞ்சுகள் பறந்து வந்து எங்களது வீடுகளில் உள்ள தண்ணீர் தொட்டிகள், உணவு பாத்திரங்கள் உள்ள அனைத்து இடங்களிலும் பரவி வருகிறது.

மேலும் இந்த பஞ்சு துகள்களை நாங்கள் சுவாசித்து வருகிறோம். இதனால் எங்களுக்கு சுவாசக்கோளாறு, இதய நோய், தீராத சளி, காசநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகிறோம். எனவே மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு எங்கள் பகுதியில் செயல்படும் நூற்பாலைக்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி உள்ளனர்.

தண்ணீர் திறக்க வேண்டும்

தமிழக ஐக்கிய விவசாயிகள் சங்க தலைவர் ஈ.வி.கே.சண்முகம் கொடுத்திருந்த மனுவில், 'கொரோனா பாதிப்பு குறைய தொடங்கி உள்ளது. எனவே விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கீழ்பவானி பாசன இரட்டை படை மதகுகளுக்கும், சென்னசமுத்திரம் கிளை வாய்க்கால் ஒற்றைப்படை மதகு பாசனத்திற்கும் புன்செய் பயிருக்கு உடனே தண்ணீர் திறக்க வேண்டும். மேலும் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் சிலாப் போடுவதை நிறுத்த வேண்டும்' என்று கூறி இருந்தார்.

கொடுமுடி இச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த வரதாள் என்பவர் கொடுத்திருந்த மனுவில், ‘தனது மகன் மற்றும் மருமகள் சாலை விபத்தில் இறந்து விட்டனர். அவர்கள் மீது மோதிய வாகனத்தை கண்டுபிடித்து, சாலை விபத்து நிவாரண திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்' என்று கூறி இருந்தார்.

பெருந்துறை அருகே உள்ள தெற்குப்பாளையம் பகுதியை சேர்ந்த மகேந்திரன் என்பவர் கொடுத்திருந்த மனுவில், ‘நாங்கள் கடந்த 3 தலைமுறைகளாக நத்தம் நிலத்தில் பயன்படுத்தி வந்த வண்டிப்பாதையை தற்போது தனியார் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து குடிசை அமைத்துள்ளார். இதனால் நாங்கள் எங்கள் வீட்டில் இருந்து பிரதான சாலைக்கு செல்ல மிகவும் சிரமப்படுகிறோம். எனவே நாங்கள் மீண்டும் அந்த பாதையை பயன்படுத்த வழிவகை செய்ய வேண்டும்' என்று கூறி இருந்தார்.

Next Story