மாடப்பள்ளி உழவர் சேவை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் பருத்தி விற்பனை தொடக்கம் - முதல் நாளில் ரூ.25 லட்சத்துக்கு ஏலம் போனது


மாடப்பள்ளி உழவர் சேவை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் பருத்தி விற்பனை தொடக்கம் - முதல் நாளில் ரூ.25 லட்சத்துக்கு ஏலம் போனது
x
தினத்தந்தி 29 Dec 2020 3:39 PM IST (Updated: 29 Dec 2020 3:39 PM IST)
t-max-icont-min-icon

மாடப்பள்ளி உழவர் சேவை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் விவசாயிகள் கொண்டு வந்த பருத்தி விற்பனை தொடக்க விழா நடந்தது. அதில் முதல் நாளில் ரூ.25 லட்சத்துக்கு ஏலம் போனது.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் தாலுகா மாடப்பள்ளி கிராமத்தில் மாடப்பள்ளி உழவர் சேவை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இங்கு திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆலங்காயம், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி, கந்திலி உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைந்த பருத்தியை மூட்டைகளில் கட்டிக் கொண்டு வந்து மாடப்பள்ளி உழவர் சேவை கூட்டுறவு கடன் சங்கத்தில் வைப்பார்கள்.

இந்தப் பருத்தியை ஈரோடு, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, மும்பை ஆகிய பகுதிகளில் இருந்து வரும் வியாபாரிகள் பார்வையிட்டு ரகசிய முறையில் விலை நிர்ணயம் செய்வார்கள். அதில் யார் அதிக விலைக்கு கேட்கிறார்களோ அவர்களுக்கு பருத்தி விற்பனை செய்து பணத்தை வியாபாரிகளுக்கு வழங்குவார்கள்.

அதன்படி நேற்று பருத்தி ஏல விற்பனை தொடக்க விழா மாடப்பள்ளி உழவர் சேவை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடந்தது. விழாவுக்கு தலைவர் ஏ. தேவராஜ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சாமிக்கண்ணு வரவேற்றார். சிறப்பு பூஜை செய்து பருத்தி ஏல விற்பனையை முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் பி.கே. சிவாஜி தொடங்கி வைத்தார்.

விவசாயிகள் முதல் நாளில் 250 குவின்டால் எடையிலான 300 மூட்டை பருத்தியை ஏலத்தில் வைத்திருந்தனர். மொத்தம் ரூ.25 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது. ஏலத்தில் டி.சி.எச். பருத்தி ரூ.7 ஆயிரத்து 350-க்கும், ஆர்.சி.எச். பருத்தி ரூ.6 ஆயிரத்துக்கும் ஏலம் போனது.

நிகழ்ச்சியில் இயக்குனர்கள், விவசாயிகள், வியாபாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்த பருத்திக்கு உடனடியாக பணம் வழங்கப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்தனர். இறுதியில் செயலாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.

Next Story