பணியை முடிக்காமல் நிலுவையில் உள்ள பிரதம மந்திரி குடியிருப்புத்திட்ட பயனாளிகள் வீடு கட்ட உயர்த்தப்பட்ட அரசு மானியத்தை பெறலாம் - கலெக்டர் தகவல்
பணியை முடிக்காமல் நிலுவையில் உள்ள பிரதம மந்திரி குடியிருப்புத்திட்ட பயனாளிகள் வீடு கட்ட உயர்த்தப்பட்ட அரசு மானியத்தை பெற்றுப் பயன் அடையலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டத்தில் 2011-ம் ஆண்டு எடுக்கப்பட்ட சமூக பொருளாதாரச் சாதிவாரி கணக்கெடுப்புப் பட்டியலில் இடம் பெற்றுள்ள எஸ்.சி. மற்றும் எஸ்.டி. வகுப்பைச் சார்ந்த தகுதியான குடும்பங்களில் இருந்து பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு 2019-20 ம் ஆண்டு பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தின் (ஊரகம்) கீழ் இலவச வீடுகள் கட்டுவதற்கு வேலை உத்தரவு வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி தற்போது 1,568 வீடுகள் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. வகுப்பைச் சார்ந்த தகுதியான பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு மத்திய அரசின் பங்குத்தொகை ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் வழங்கப்படுகிறது. இத்துடன் மாநில அரசின் சார்பில் ரூ.50 ஆயிரமாக வழங்கப்பட்டு வந்த மேற்கூரை நிதி தற்போது ரூ.1 லட்சத்து 20 ஆயிரமாக உயர்த்தப்பட்டு உள்ளது.
இதன் மூலம் ஒரு வீட்டுக்கான அலகுத்தொகை ரூ.2 லட்சத்து 40 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இதுதவிர மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் 90 திறன்சாரா மனித சக்தி நாட்களுக்கு ஊதியமாக நாளொன்றுக்கு ரூ.259 வீதம் மொத்தம் ரூ.23,310 வழங்கப்படுவதோடு, தனிநபர் இல்ல கழிவறை கட்டவும் ரூ.12 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது. ஒரு வீட்டுக்கு மொத்தம் ரூ.2 லட்சத்து 75 ஆயிரத்து 310 அரசு மானியமாக வழங்குகிறது.
எனவே இந்த வாய்ப்பினை பயன்படுத்தி நிரந்தர காத்திருப்போர் பட்டியலில் உள்ள வீடு இல்லாதவர்கள் தங்களது முழு விவரங்களை சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகி உரிய ஆவணங்களை அளித்து, இத்திட்டத்தின் கீழ் இலவச வீடு பெற்றுப் பயன் பெறலாம்.
மேலும் இத்திட்டத்தின் கீழ் 2016-17 முதல் 2019-20ம் ஆண்டு வரை ஏற்கனவே வேலை உத்தரவு வழங்கப்பட்டு இறுதிப்பட்டியல் தொகை பெறாத பயனாளிகளுக்கும் மேற்கூரை நிதியாக வழங்கப்பட்டு வந்த தொகை ரூ.50 ஆயிரத்து தற்போது ரூ.1 லட்சத்து 20 ஆயிரமாக உயர்த்தப்பட்டு உள்ளதால் வேலை பெற்றுப் பணியை முடிக்காமல் நிலுவை வைத்துள்ள அனைத்து பிரதம மந்திரி குடியிருப்புத் திட்ட பயனாளிகளும் வீடு கட்டும் பணியினை விரைந்து முடித்து, உயர்த்தப்பட்ட அரசு மானியத்தைப் பெற்று பயன் பெறலாம்.
இந்தத் தகவலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story