தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி - போலீசார் தடுத்து நிறுத்தினர்
தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டம் கொட்டாவூர் பகுதியை சேர்ந்தவர் பச்சையம்மாள் (வயது 49). இவர் பிக்கிலி கொல்லப்பட்டி பகுதியில் அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் பேன்சி கடை நடத்தி வந்தார். இவர் நேற்று தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு அவர் தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெய்யை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதைப்பார்த்து அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் இருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ஓடிச்சென்று பச்சையம்மாளின் தீக்குளிப்பு முயற்சியை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்
அப்போது பச்சையம்மாள் கூறுகையில், கடைக்கு பஸ்சில் சென்று வரும்போது பாப்பாரப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஒரு பஸ் டிரைவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவருக்கு ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் கடனாக கொடுத்தேன். 10 ஆண்டுகள் ஆகியும் அவர் பணத்தை திருப்பி தரவில்லை. இதுதொடர்பாக போலீசார் மற்றும் அதிகாரிகளிடமும் புகார் அளித்துள்ளேன். ஆனால் பணத்தை மீட்டு் தர எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த நான் தீக்குளிக்க முயன்றேன் என்று தெரிவித்தார். இதுதொடர்பாக போலீசார் மற்றும் அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story