அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு கிடைக்க அடித்தளம் அமைத்தவர் மு.க. ஸ்டாலின் - தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. பெருமிதம்


அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு கிடைக்க அடித்தளம் அமைத்தவர் மு.க. ஸ்டாலின் - தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. பெருமிதம்
x
தினத்தந்தி 29 Dec 2020 9:34 PM IST (Updated: 29 Dec 2020 9:34 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சேர இட ஒதுக்கீடு கிடைக்க அடித்தளம் அமைத்தவர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தான் என தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. கூறினார்.

விருதுநகர்,

விருதுநகர் அருகே சத்திர ரெட்டியபட்டி கிராமத்தில் மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு விருதுநகர் எம். எல்.ஏ. ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில் விருதுநகர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் 26 லட்சம் இளைஞர்கள் படித்து விட்டு வேலையில்லாமல் திண்டாடி வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் அ.தி.மு.க. அரசு வேலைவாய்ப்பை அதிகரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கடந்த முறை கட்சித் தலைவராக உங்கள் கிராமத்திற்கு வந்தார். அடுத்த முறை வரும்போது முதல்-அமைச்சராக வருவதற்கு வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நீங்கள் ஆதரவு தர வேண்டும்.

விருதுநகர் மட்டுமின்றி அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சேர 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடித்தளம் அமைத்தவர் மு.க. ஸ்டாலின் தான். அவர் போராட்டம் நடத்த போவதாக அறிவித்த பின்புதான் அரசு இதற்கான அரசாணை வெளியிட்டது.

அதன்பின்னரும் தனியார் மருத்துவக்கல்லூரியில் சேர்வதற்கு ஏழை, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கல்விக்கட்டணத்தை தி.மு.க. கழகமே செலுத்தும் என்று தெரிவித்த பின்பு தான் அரசு கல்வி கட்டணத்தை செலுத்த முன்வந்தது.

எனவே ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர அடித்தளம் அமைத்து தந்தவர் மு.க. ஸ்டாலின் தான்.

விருதுநகர் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் இதுவரை ரூ.530 கோடி நிறைவேற்றப்பட்டது தி.மு.க. ஆட்சி காலத்தில் தான்.

நோய் பாதிப்பு காலத்தில் எந்த உதவித்தொகையும் செய்ய முன்வராத அ.தி.மு.க. அரசு, தற்போது பொங்கல் பரிசாக ரூ. 2,500 அறிவித்துள்ளது. எதற்காக என்றால் வருகிற சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டுதான் இந்த பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் நலனில் அக்கறை கொண்டவர் மு.க. ஸ்டாலின் தான். எனவே நீங்கள் எல்லோரும் அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம் என்று முடிவு செய்து தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். இந்த குரல் சென்னை கோட்டையில் உள்ள முதல்-அமைச்சருக்கு கேட்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கிருஷ்ணகுமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story