கிணற்றை காணோம் என்பது போல பல இடங்களில் ரோட்டை காணவில்லை - டாக்டர் சரவணன் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
நடிகர் வடிவேல் ஒரு சினிமா படத்தில் கிணற்றை காணோம் என்று செல்வதை போல பல இடங்களில் ரோட்டை காணவில்லை என மக்கள் கிராம சபை கூட்டத்தில் டாக்டர் சரவணன் எம்.எல்.ஏ. குற்றம் சாட்டினார்.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் அருகே உள்ள கூத்தியார்குண்டு மந்தை திடலில் தி.மு.க. சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் பசும்பொன் தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சி தலைவர் கருணாநிதி, ஊராட்சி வார்டு உறுப்பினர் உமா, கிளை பொறுப்பாளர்கள் ராஜா, கண்ணன், அய்யனார், அய்யாகாளை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக டாக்டர் சரவணன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
திருப்பரங்குன்றம் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக நான் இருக்கிறேன். ஊராட்சி தலைவர்கள் 22 பேரில் 15, ஒன்றிய கவுன்சிலர்கள், யூனியன் தலைவர் என்று எல்லோரும் தி.மு.க.வை சார்ந்தவர்களாக இருந்தபோதிலும் மக்களுக்கு நினைத்ததை நிறைவேற்ற முடியவில்லை..
கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சி இருந்தபோதிலும் நடிகர் வடிவேலு ஒரு படத்தில் கிணற்றை காணோம் என்று சொல்வதைப் போல இந்த தொகுதியில் பல இடங்களில் ரோட்டை காணவில்லை. குண்டும் குழியுமாக ரோடுகள் உள்ளன. மருத்துவமனைகளில் மாத்திரை இல்லை. மருந்து இல்லை. செவிலியர்கள் பற்றாக்குறையாக உள்ளது. மக்கள் கோரிக்கைகளை தலைவர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்வோம். அது தேர்தல் அறிக்கையாக வரும். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் மக்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.
திருப்பரங்குன்றம் தொகுதியில் மல்லிகைப்பூ அதிகப்படியாக சாகுபடி செய்யப்படுகிறது. ஆகவே விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நறுமண தொழிற்சாலை அமைக்கப்பட வேண்டும். அதன் மூலம் வேலை வாய்ப்பு கிடைக்கும். விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும். மக்கள் கோரிக்கைகள் நிறைவேற ஆட்சி மாற்றம் தேவை.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் ஊராட்சி மன்ற துணை தலைவர் பானுமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story