நிலத்தை ஊராட்சி தலைவர் அபகரித்ததாக கூறி கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் தீக்குளிக்க முயற்சி


நிலத்தை ஊராட்சி தலைவர் அபகரித்ததாக கூறி கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 29 Dec 2020 10:20 PM IST (Updated: 29 Dec 2020 10:20 PM IST)
t-max-icont-min-icon

நிலத்தை ஊராட்சி மன்ற தலைவர் அபகரித்ததாக கூறி முதியவர் ஒருவர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுரை,

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடக்கும். ஆனால் கொரோனா பரவலை தடுப்பதற்காக இந்த கூட்டம் நடத்தப்படவில்லை. எனவே பொதுமக்கள் தங்களது மனுக்களை இ-சேவை மையம் மூலம் அனுப்பலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இதனை பொருட்படுத்தாத பொதுமக்கள் திங்கட்கிழமையன்று மனு கொடுக்க கலெக்டர் அலுவலகத்திற்கு வருகின்றனர். எனவே அவர்களிடம் மனுக்களை பெறுவதற்காக மனு பெட்டி ஒன்று வைக்கப்பட்டு உள்ளது. அதில் எந்த நாட்களிலும் மனுக்களை போடலாம். ஆனால் பொதுமக்கள் திங்கட்கிழமையன்று அதிக அளவில் வந்து மனுக்களை பெட்டியில் போடுகின்றனர். நேற்றும் ஏராளமானோர் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்திருந்தனர்.

இந்த நிலையில் நேற்று முதியவர் ஒருவர் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். மனுவுடன் மண் எண்ணெய் கேனையும் மறைத்து கொண்டு வந்தார். கலெக்டர் அலுவலகத்திற்குள் வந்தவுடன் மண்எண்ணெயை தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். ஆனால் அருகில் இருந்தவர்கள் அவரிடம் இருந்து மண்எண்ணெய் கேனை பறித்தனர். இதனை கண்டு வேகமாக வந்த பாதுகாப்பு போலீசார் அந்த முதியவரை விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

அந்த முதியவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

எனது பெயர் பெருமாள் (வயது 60). பேரையூர் தாலுகா அத்திப்பட்டி கிராமத்தில் வசிக்கிறேன். எங்கள் ஊரில் பிழைப்பு இல்லாததால், கடந்த 6 ஆண்டாக திருப்பூர் சென்று வேலை செய்து வருகிறேன். எனக்கு சொந்தமான நிலத்தையும், 3 வீடுகளையும் ஊராட்சி மன்ற தலைவர் அபகரித்து விட்டார். இது குறித்து போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. எனவே வேறுவழியின்றி கலெக்டர் அலுவலகத்திற்கு தீக்குளிக்க வந்தேன். எனது நிலத்தையும், வீட்டையும் மீட்டு தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story