பழனி அருகே கோர விபத்து: கார் மீது டேங்கர் லாரி மோதியதில் 2 விவசாயிகள் பலி- உறவினர் மகனை வெளிநாட்டிற்கு அனுப்பி விட்டு திரும்பியபோது பரிதாபம்


பழனி அருகே கோர விபத்து: கார் மீது டேங்கர் லாரி மோதியதில் 2 விவசாயிகள் பலி- உறவினர் மகனை வெளிநாட்டிற்கு அனுப்பி விட்டு திரும்பியபோது பரிதாபம்
x
தினத்தந்தி 29 Dec 2020 10:36 PM IST (Updated: 29 Dec 2020 10:36 PM IST)
t-max-icont-min-icon

பழனி அருகே கார் மீது டேங்கர் லாரி மோதிய கோர விபத்தில் பட்டுக்கோட்டையை சேர்ந்த விவசாயிகள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

நெய்க்காரப்பட்டி,

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை சொக்கநாயனூரை சேர்ந்தவர் பிரனமயன் (வயது 55). விவசாயி. இவர், தனது மகன் பிரகாசை (28) மாலத்தீவுக்கு வேலைக்கு அனுப்ப முடிவு செய்தார். இதற்காக கடந்த 4 நாட்களுக்கு முன்பு தனது ஊரில் இருந்து கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்துக்கு பிரனமயன் தனது மகனுடன் ஒரு காரில் புறப்பட்டார். அவருடன் உறவினர்களான அதே பகுதியை சேர்ந்த விவசாயிகள் சத்தியராஜ் (35), பாலகுமார் (36), முருகேஷ் (35), அஜித் (30) ஆகியோரும் சென்றனர். அங்கு பிரகாசை வழி அனுப்பிவிட்டு நேற்று முன்தினம் இரவு மீண்டும் பிரனமயன் உறவினர்களுடன் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். காரை முருகேஷ் ஓட்டினார்.

பழனியை அடுத்த தாளையம் என்னுமிடத்தில் வந்தபோது, தூத்துக்குடியில் இருந்து சமையல் எண்ணெய் ஏற்றிக் கொண்டு சென்ற டேங்கர் லாரி எதிர்பாராதவிதமாக பிரனமயன் சென்ற கார் மீது நேருக்குநேர் மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. காரின் இடிபாடுகளுக்குள் சிக்கிய முருகேஷ், பாலகுமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். படுகாயங்களுடன் பிரனமயன், அஜித், சத்தியராஜ் ஆகியோர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். லாரி டிரைவர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதற்கிடையே அவ்வழியே வந்தவர்கள் இந்த விபத்து குறித்து சாமிநாதபுரம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் சாமிநாதபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பலியான பாலகுமார், முருகேஷ் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்துக்கு காரணமான தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தை சேர்ந்த லாரி டிரைவர் கனகராஜ் (35) என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story