கும்மிடிப்பூண்டி அருகே வாங்கிய கடனுக்காக கோழிக்கடையை பறித்து கொண்டதாக வாலிபர் தீக்குளிக்க முயற்சி


கும்மிடிப்பூண்டி அருகே வாங்கிய கடனுக்காக கோழிக்கடையை பறித்து கொண்டதாக வாலிபர் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 30 Dec 2020 1:47 AM IST (Updated: 30 Dec 2020 1:47 AM IST)
t-max-icont-min-icon

வாங்கிய கடனுக்காக கோழிக்கடையை பறித்து கொண்டதாக வாலிபர் தீக்குளிக்க முயன்றார்.

ரூ.12 லட்சம் கடன்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பாலகிருஷ்ணபுரத்தில் தனியாருக்கு சொந்தமான ஒரு வாடகை கட்டிடத்தில் கோழிக்கடை நடத்தி வருபவர் இளையராஜா (வயது 30). இவர் புதுகும்மிடிப்பூண்டியை சேர்ந்த 2 பேரிடம் மொத்தம் ரூ.12 லட்சம் வரை கடன் வாங்கி அதனை உரிய நேரத்தில் திருப்பி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனையடுத்து கடன் கொடுத்தவர்களில் ஒருவர் நேரடியாக கட்டிட உரிமையாளாரிடம் பேசி அந்த கோழிக்கடையை எடுத்து நடத்தி வந்தார்.

இந்த நிலையில், தான் வாங்கிய கடனுக்காக தனது கோழிக்கடையை கடன்காரர்கள் பறித்து கொண்டதாகவும், அவர்களிடம் இருந்து கடையை மீட்டு தரும்படியும் இளையராஜா கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

தீக்குளிக்க முயற்சி
இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அந்த கோழிக்கடை முன்பு நேற்று இளையராஜா பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர். பின்னர் விசாரணைக்காக கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸ் நிலையத்திற்கு இளையராஜாவை போலீசார் அழைத்து சென்றனர்.

மேலும் கோழிக்கடைக்கு தற்காலிகமாக பூட்டு போட்ட போலீசார், இந்த பிரச்சினை தொடர்பாக பேசி ஒரு முடிவுக்கு வந்த பின்பு தான் கடையை திறக்க வேண்டும் எனவும் சம்பந்தப்பட்டவர்களிடம் அறிவுறுத்தி உள்ளனர்.

Next Story