வருகிற 3-ந் தேதி ஆன்லைனில் நடக்கிறது; கர்நாடக சித்ரகலா பரிஷத் சார்பில் 18-வது ஓவிய சந்தை


சித்ரகலா பரிஷத் தலைவர் பி.எல்.சங்கர் கையால் வரையப்பட்ட ஒவியங்களை அறிமுகப்படுத்திய போது எடுத்த படம்
x
சித்ரகலா பரிஷத் தலைவர் பி.எல்.சங்கர் கையால் வரையப்பட்ட ஒவியங்களை அறிமுகப்படுத்திய போது எடுத்த படம்
தினத்தந்தி 30 Dec 2020 4:18 AM IST (Updated: 30 Dec 2020 4:18 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக சித்ரகலா பரிஷத் சார்பில் 18-வது ஓவிய சந்தை வருகிற 3-ந் தேதி ஆன்லைனில் நடக்கிறது.

கர்நாடக சித்ரகலா பரிஷத் தலைவர் பி.எல்.சங்கர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

ஓவிய சந்தை
கர்நாடக சித்ரகலா பரிஷத் நிறுவப்பட்டு 60 ஆண்டுகள் ஆவதையொட்டி வைர விழா கொண்டாடுகிறோம். அதன் ஒரு பகுதியாக 18-வது ஓவிய சந்தை வருகிற 3-ந்தேதி தொடங்கி பிப்ரவரி மாதம் 3-ந்தேதி வரை ஒரு மாதம் நடக்கிறது. இதுவரை 17 சந்தைகள் நேரடியாக பெங்களூருவில் நடத்தப்பட்டது. இந்த முறை கொரோனா பரவல் காரணமாக ஓவிய சந்தையை நேரடியாக நடத்த முடியாத சூழல் உள்ளது. அதனால் இந்த ஓவிய சந்தையை ஆன்லைனில் நடத்த முடிவு செய்துள்ளோம்.

அன்றைய தினம் முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு முக்கியமான கட்சி நிகழ்ச்சி ஒன்று இருப்பதால், இந்த ஓவிய சந்தையை இன்போசிஸ் அறக்கட்டளை தலைவர் சுதா மூர்த்தி தொடங்கி வைக்கிறார். அன்றைய தினம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. அவை சமூக வலைதளங்களில் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. இதற்காக ஒரு இணையதள பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அது ஒரு மாதத்திற்கு செயல்படும். தேவைப்பட்டால் அது மேலும் நீட்டிக்கப்படும்.

வெளிநாட்டு ஓவியர்கள்
முக்கியமான 250 ஓவியர்களின் ஓவியங்கள், இந்த சித்ரகலா பரிஷத் வளாகத்தில் உள்ள அறைகளில் பார்வைக்கு வைக்கப்படும். இந்த முறை ஓவிய சந்தையை, கொரோனா முன்கள பணியாளர்களுக்கு அர்ப்பணிக்க முடிவு செய்துள்ளோம். இந்த ஆன்லைன் ஓவிய சந்தையில் நாடு முழுவதும் இருந்து 1200-க்கும் மேற்பட்ட ஓவியர்கள் கலந்துகொள்ள ஒப்புக் கொண்டுள்ளனர். இந்த முறை ஆன்லைனில் நடைபெறுவதால், 22 நாடுகளை சோ்ந்த வெளிநாட்டு ஓவியர்களும் பங்கேற்கிறார்கள்.

இந்த ஓவிய சந்தையையொட்டி ஓவியம் தொடர்பான கருத்தரங்குகள், விவாதங்கள், கலந்துரையாடல்கள் நடைபெறும். இடைத்தரகர்கள் இல்லாமல் ஓவிய கலைஞர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் நேரடி தொடர்பு ஏற்படுத்தப்படுகிறது. இது தான் ஓவிய சந்தையின் முக்கிய நோக்கம். இந்த ஆன்லைன் ஓவிய சந்தையில் பங்கேற்கும் ஓவியர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு ஆன்லைன் பக்கம் உருவாக்கப்பட்டு, அதில் அவர்களின் ஓவியங்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்படும்.

தஞ்சாவூர்
இந்த ஓவிய சந்தையில் மைசூரு, தஞ்சாவூர், ராஜஸ்தான், மதுபானி ரக ஓவியங்கள் பார்வைக்கும், விற்பனைக்கும் கிடைக்கும். www.karnatakachitrakala parishath.com/chitra-santhe/ மற்றும் chitrasanthe.org என்ற இணையதள முகவரிக்குள் சென்றால், ஓவிய சந்தையை பார்க்க முடியும். இது தேசிய அளவில் நடைபெறும் மிகப்பெரிய ஓவிய சந்தை ஆகும்.

இவ்வாறு பி.எல்.சங்கர் கூறினார்.

Next Story