மும்பை கோவிலில் தீப்பிடித்த வழக்கில் திருப்பம்; பலியான 3 வாலிபர்கள் எரித்து கொலை செய்யப்பட்டது அம்பலம்; பெட்ரோலை ஊற்றி தீ வைத்தவர் கைது


மும்பை கோவிலில் தீப்பிடித்த வழக்கில் திருப்பம்; பலியான 3 வாலிபர்கள் எரித்து கொலை செய்யப்பட்டது அம்பலம்; பெட்ரோலை ஊற்றி தீ வைத்தவர் கைது
x
தினத்தந்தி 30 Dec 2020 4:55 AM IST (Updated: 30 Dec 2020 4:55 AM IST)
t-max-icont-min-icon

காந்திவிலி சாய்பாபா கோவிலில் 3 பேர் உடல்கருகி பலியான வழக்கில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தீ விபத்து
மும்பை காந்திவிலி பந்தர்பகாடி ரோட்டில் சாய்பாபா கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அதிகாலை 4.15 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது பற்றி அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பூட்டப்பட்டு இருந்த கோவிலில் படுத்து உறங்கிய 3 வாலிபர்கள் உடல் கருகி பலியானார்கள். போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்தவர்கள் பெயர் சுபாஷ் கோடே (வயது 25) , யுவராஜ் பவார் (25) , மன்னுகுப்தா (26) என்பது தெரியவந்தது.

தீ வைத்த வாலிபர் கைது
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் மீது பெட்ரோல் ஊற்றப்பட்டு தீ வைத்து கொலை செய்யப்பட்டதும், இந்த கொலையை செய்தவர் அருகே வசித்து வந்த பாவேஷ் சந்தூர்கர் (வயது20) என்பதும் தெரியவந்தது.

அதாவது, சம்பவத்தன்று பலியான யுவராஜ் பவாருக்கும், பாவேஷ் சந்தூர்கருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதனால் அவரை கொலை செய்ய முடிவு செய்தார்.

மோட்டார் சைக்கிளில் இருந்த பெட்ரோலை திருடி கோவிலில் தூங்கி கொண்டிருந்த யுவராஜ் பவார் உள்பட 3 பேர் மீது ஊற்றி உள்ளார். பின்னர் தீ வைத்து விட்டு தலைமறைவானது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

முதலில் மின்கசிவு காரணமாக தீ விபத்து நடந்ததாக கூறப்பட்டது. போலீஸ் விசாரணையில் அது கொலை என்பது உறுதியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story