7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமையால் கொடூர கொலை: வாலிபருக்கு தூக்கு தண்டனை


7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமையால் கொடூர கொலை: வாலிபருக்கு தூக்கு தண்டனை
x
தினத்தந்தி 30 Dec 2020 6:24 AM IST (Updated: 30 Dec 2020 6:24 AM IST)
t-max-icont-min-icon

7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமையில் கொலை செய்யப்பட்ட வழக்கில் வாலிபருக்கு தூக்கு தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம், ஏம்பல் பகுதியில் கடந்த ஜூன் மாதம் 30-ந் தேதி அன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற 7 வயது சிறுமியை காணவில்லை. அவரது உடல் பலத்த காயங்களுடன் கடந்த ஜூலை மாதம் 1-ந் தேதி அதே பகுதியில் ஊரணி பக்கம் முட்புதரில் கிடந்தது. அவர் பாலியல் வன்கொடுமையால் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது உடலை ஏம்பல் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குற்றவாளியை கைது செய்யக்கோரி சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் பெரும் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த அருண்சக்திகுமார் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். மேலும் இதுகுறித்து ஏம்பல் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழும், கொலை வழக்காகவும் பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசார் மிகதுரிதமாக செயல்பட்டு இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த பூ வியாபாரியான சாமுவேல் என்கிற ராஜாவை (வயது 25) கைது செய்தனர்.

தப்பியோடிய சம்பவம்

சிறுமியின் உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட போது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததில் மேலும் ஒருசிலருக்கு தொடர்பு இருப்பதாக கூறினர். சம்பவத்தில் ஈடுபட்டது சாமுவேல் தான் என போலீசார் உறுதிப்பட எடுத்துக்கூறினர். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு அரசு தரப்பில் நிவாரண தொகை வழங்கப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணைக்காக சாமுவேலை புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக கடந்த ஜூலை மாதம் 16-ந் தேதி போலீசார் அழைத்து வந்தனர். அப்போது அவர் தப்பியோடி அருகில் மறைந்திருந்தார். அவரை நீண்ட நேர தேடுதல் வேட்டைக்கு பின் மருத்துவமனை அருகே ஒரு காட்டுப்பகுதியில் போலீசார் பிடித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கணேஷ் நகர் போலீஸ் நிலையத்தில் தனியாக ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மகிளா கோர்ட்டு

சிறுமி பாலியல் வன்கொடுமையால் கொலை செய்யப்பட்ட வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை கடந்த செப்டம்பர் மாதம் 1-ந் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்ததை தற்போதைய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜிசரவணன் கண்காணித்து வந்தார். மேலும் ஒரு சில நாட்களில் வழக்கின் விசாரணையின் போது கோர்ட்டிற்கு அவர் நேரில் வந்து பார்வையிட்டார்.

இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக நேற்று காலை தகவல் வெளியானது. திருச்சி மத்திய சிறையில் இருந்து போலீசார் சாமுவேலை பலத்த பாதுகாப்புடன் புதுக்கோட்டை மகிளா கோர்ட்டிற்கு ஆஜர்படுத்த மதியம் 1.35 மணி அளவில் அழைத்து வந்தனர். போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் மதியம் 1.50 மணி அளவில் கோர்ட்டிற்கு நேரில் வந்தார். அதன்பின் சிறிது நேரம் கோர்ட்டில் இருந்து போலீசாரிடம் கேட்டறிந்த பின் புறப்பட்டு சென்றார்.

தண்டனையை குறைக்க கெஞ்சல்

இந்த நிலையில் மாலை 5.15 மணி அளவில் நீதிபதி டாக்டர் சத்யா தீர்ப்பு வழங்கினார். அப்போது சாமுவேலை அழைத்து அவரிடம் இந்த வழக்கு தொடர்பானதை கூறினார். அப்போது அவர் கூறுகையில், "உன் (சாமுவேல்) மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள், அரசின் தரப்பில் நிரூபிக்கப்பட்டுள்ளன. மேலும் அவை அனைத்தும் உண்மை என தெரிகிறது. குற்றவாளி என அறிவிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படுகிறது" என்றார்.

மேலும் உனது தரப்பு கருத்தை கூறு என்றார். அதற்கு சாமுவேல், ‘எனக்கு தந்தை-தாய் உள்ளனர். நான் வீட்டிற்கு ஒரே மகன். அவர்களை நான் கவனித்துக்கொள்ள வேண்டி உள்ளது. இந்த வழக்கின் விசாரணையின்போது என்னோடு 3 பேரை போலீசார் அழைத்து வந்தார்கள். அதன்பின் என்னை மட்டும் கைது செய்தனர்' என்றார். அப்போது நீதிபதி, ‘நீ இந்த கருத்தை இப்போது கூறக்கூடாது. வழக்கின் விசாரணையின் போது எதுவும் பேசாமல் இருந்து விட்டாய்' என்றார். இந்த வழக்கில் தனக்கு குறைந்தபட்ச தண்டனையாக வழங்குமாறு சாமுவேல் கெஞ்சி கேட்டார்.

3 மரண தண்டனை

அதனை தொடர்ந்து சில நிமிடங்களுக்கு பிறகு தீர்ப்பை நீதிபதி சத்யா கூறினார். இதில் 3 மரண தண்டனையை சாமுவேலுக்கு விதித்து தீர்ப்பளித்தார். அப்போது அவர் வழங்கிய தீர்ப்பு விவரம் வருமாறு:-

7 வயது சிறுமி பலவகையான பாலியல் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டு கொடுமையான முறையில் கொலை செய்ததற்காக மரண தண்டனையும், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் திருத்தப்பட்ட சட்டம் (போக்சோ) 2019-ன் கீழ் பிரிவு 5 (எம்) -ல் மரண தண்டனையும், பிரிவு 5 (ஜே) -ல் மரண தண்டனையும், எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ஆயுள்கால சிறை தண்டனையும், சிறுமியை கடத்தியதற்காக 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்டத்தவறினால் 2 மாதம் சிறை தண்டனையும், சிறுமியை கொலை செய்தபின் சாட்சியங்களை மறைத்தற்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்டத்தவறினால் 2 மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.

முதன் முறையாக...

சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலையான வழக்கில் வாலிபருக்கு 3 மரண தண்டனை விதிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. புதுக்கோட்டை மாவட்டத்தில் போக்சோ வழக்கில் இதுவே முதல் முறையாக மரண தண்டனை விதிக்கப்படுவதாக போலீசார் கூறினார். மேலும் தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத வகையில் 3 மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். வாலிபருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையானது தூக்கு தண்டனையாகும்.

இதனை ஐகோர்ட்டில் உறுதி செய்யப்பட்ட பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கில் அப்போது அறந்தாங்கி துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய பாலமுருகன், தற்போதைய துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயசீலன், இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன், கோர்ட்டு ஏட்டு அண்ணாதுரை ஆகியோரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பாராட்டினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் அங்கவை வாதாடினார்.

பேனா உடைப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2001-ம் ஆண்டில் பொன்னமராவதி பகுதியில் 5 பேரை கொன்ற சைக்கோ ஒருவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். சிறுமி பாலியல் கொடுமையில் கொலை செய்யப்பட்ட வழக்கில் வாலிபருக்கு 3 மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நீதிபதி சத்யா தீர்ப்பு வழங்கியதும், அந்த தீர்ப்பை எழுதிய தனது பேனாவை உடைத்தார்.

அந்த பேனாவை கோர்ட்டு ஊழியர் வெளியே எடுத்து வந்து ஓரமாக வீசினார். மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டதும் குற்றவாளி சாமுவேல் சோகமாகினார். அவரை திருச்சி மத்திய சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இந்த தீர்ப்பையொட்டி மகிளா கோர்ட்டு முன்பு நேற்று மாலை பரபரப்பாக காணப்பட்டது.

Next Story