2 கன்றுக்குட்டிகளை கடித்துக் கொன்ற சிறுத்தை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை


2 கன்றுக்குட்டிகளை கடித்துக் கொன்ற சிறுத்தை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை
x
தினத்தந்தி 30 Dec 2020 7:46 AM IST (Updated: 30 Dec 2020 7:46 AM IST)
t-max-icont-min-icon

வடக்கு விஜயநாராயணத்தில் 2 கன்றுக்குட்டிகளை சிறுத்தை கடித்துக் கொன்றது.

இட்டமொழி,

நெல்லை மாவட்டம் வடக்கு விஜயநாராயணம் பெரியகுளம், குட்டத்தட்டிப்பாறை அருகே செல்லும் சாலையில் உள்ள பகுதியில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த புருஷோத்தமன் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. அந்த தோட்டத்தை வடக்கு விஜயநாராயணம் சர்ச் தெருவை சேர்ந்த சண்முகசுந்தரம் (வயது 50) என்பவர் பராமரித்து வருகிறார். அந்த தோட்டத்தில் அவர் மாடுகளையும் வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் வழக்கம் போல 6 மாடுகளையும் தோட்டத்தில் கட்டி விட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார்.

நேற்று அதிகாலையில் சண்முகசுந்தரமும், அவரது மனைவியும் தோட்டத்துக்கு சென்றனர். அப்போது அங்கு கட்டப்பட்டிருந்த 2 கன்றுக்குட்டிகள் படுகாயங்களுடன், சிதைந்த நிலையில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் ஒரு மாட்டுக்கு தலையில் பலத்த காயங்களுடன் காணப்பட்டது. மற்ற 3 மாடுகளும் கயிற்றில் இருந்து அறுத்துக்கொண்டு நின்றது.

சிறுத்தை கடித்து சாவு

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஊர் மக்கள் அங்கு திரண்டனர். வடக்கு விஜயநாராயணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஷாஜி, கால்நடைத்துறை டாக்டர் ராஜூ, வனத்துறை டாக்டர் மனோகரன், கால்நடை ஆய்வாளர் ரவி நாராயணன் ஆகியோர் விரைந்து வந்தனர். அங்கு இறந்து கிடந்த கன்றுக்குட்டிகளை பரிசோதனை செய்தனர். இதில் சிறுத்தை, கன்றுக்குட்டிகளை கடித்துக் கொன்றிருக்கலாம் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

பின்னர் மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் மேற்பார்வையில் வனச்சரகர் கருப்பையா, வனவர் பிரகாஷ், வனக்காப்பாளர்கள் மணிகண்டன், மாரித்துரை, வேட்டை தடுப்பு காவலர்கள் விரைந்து வந்து சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். அங்கு பதிந்திருந்த கால் தடங்களையும் சேகரித்தனர். சிறுத்தையை பிடிப்பதற்காக அந்த பகுதியில் கூண்டு வைக்கப்பட்டது.

வனத்துறையினர் தேடுதல் வேட்டை

நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரெட்டியார்பட்டி நாராயணன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டார். மேலும் வனத்துறையினர் சிறுத்தையை தேடி வருகின்றனர்.

Next Story