பொறையாறு அருகே நல்லாடை கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை மத்திய குழுவினர் ஆய்வு


பொறையாறு அருகே நல்லாடை கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை மத்திய குழுவினர் ஆய்வு
x
தினத்தந்தி 30 Dec 2020 9:14 AM IST (Updated: 30 Dec 2020 9:14 AM IST)
t-max-icont-min-icon

பொறையாறு அருகே நல்லாடை கிராமத்தில் தொடர்மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.

பொறையாறு,

நிவர் மற்றும் புெரவி புயல்கள் மற்றும் தொடர் கனமழை காரணமாக நெல் மற்றும் இதர பயிர்களுக்கு ஏற்பட்ட சேதங்களை மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு அருகே நல்லாடை கிராமத்தில் மத்திய மதிப்பீட்டு குழுவினர் நேற்று மாலை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் அசுடோஷ் அக்னிஹோத்ரி தலைமையில் 8 பேர் அடங்கிய மத்திய குழுவினர், புயலால் ஏற்பட்ட தொடர்மழையால் சேதமடைந்த நெற்பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த குழுவினருடன் தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திரரெட்டியும் உடன் வந்தார். நல்லாடை கிராமத்தில் வயல் பகுதிகளில் பயிர் சேதங்களை பார்வையிட்டனர். பின்னர் விவசாயிகளிடம் சேதங்கள் குறித்து கேட்டறிந்தனர். செம்பனார்கோவில், தரங்கம்பாடி, நல்லாடை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மட்டும் 30 ஆயிரம் ஏக்கர் அளவில் நெற்பயிர்களும், 700 ஏக்கர் தோட்டக்கலை பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள், மத்திய குழுவினரிடம் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

ரூ.3 ஆயிரம் செலவு

மேலும் தற்போது ஏக்கருக்கு 3 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து உரம் இட்டு ஓரளவு பயிர்களை காப்பாற்ற முயற்சி செய்து வருவதாகவும், பெரும்பாலான நெற்பயிர்கள் பதராகத்தான் வரும் நிலை உள்ளதாகவும் விவசாயிகள், மத்திய குழுவினரிடம் தெரிவித்தனர்.

மத்திய குழுவிடம் மனு ஒன்றை அளித்த கரும்பு விவசாயிகள், மழை நீர் தேக்கத்தால் கரும்பு பயிர்களின் வேர் பகுதி அழுகும் அபாயம் உள்ளதால் மகசூல் பெரிதும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே கரும்பு பயிர் செய்துள்ளவர்களுக்கும் உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

மொழிபெயர்த்து...

மத்திய குழுவிடம் விவசாயிகளின் குறைகளை நாகை கலெக்டர் பிரவீன் நாயர் மொழி பெயர்த்து கூறினார்.

ஆய்வின்போது மயிலாடுதுறை கலெக்டர் லலிதா, தரங்கம்பாடி தாசில்தார் கோமதி, வேளாண் இணை இயக்குனர் கல்யாணசுந்தரம், கூடுதல் இயக்குனர் சங்கரலிங்கம், துணை இயக்குனர் பன்னீர்செல்வம், உதவி இயக்குனர் தாமஸ் உள்ளிட்ட அதிகாரிகள், விவசாயிகள் உடனிருந்தனர்.

Next Story