8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் மேற்கு வங்க வாலிபருக்கு 20 ஆண்டு ஜெயில் ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு


8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் மேற்கு வங்க வாலிபருக்கு 20 ஆண்டு ஜெயில் ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 30 Dec 2020 5:14 AM GMT (Updated: 30 Dec 2020 5:14 AM GMT)

பெருந்துறை அருகே 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மேற்கு வங்கத்தை சேர்ந்த வாலிபருக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள பனியம்பள்ளி பகுதியில் வட மாநில தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி உள்ளனர். இங்கு மேற்கு வங்காள மாநிலம் பார்கனஸ் மொக்னபுர் பகுதியை சேர்ந்த காசிம் மண்டல் என்பவருடைய மகன் ரெபியுல் மண்டல் (வயது 26) என்பவர் தங்கி இருந்தார்.

இவர் மீது கடந்த 16-4-2019 அன்று அதே பகுதியில் வசித்து வந்த பெண் மற்றும் அவரது கணவர் ஆகியோர் ஈரோடு அனைத்து மகளிர் போலீசில் புகார் தெரிவித்தனர். அந்த புகாரின்படி, அந்த பெண்ணும், கணவரும் மேற்கு வங்காள மாநிலத்தில் இருந்து வந்து, பெருந்துறையில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். இவர்களுக்கு 11 வயதில் ஒரு மகனும், 8 வயதில் ஒரு மகளும் இருந்தனர்.

சிறுமி

இந்தநிலையில் கடந்த 16-ந் தேதி தாயும், தந்தையும் வீட்டில் இருந்தபோது, அவர்களின் 8 வயது மகள் உடல் நலம் பாதிப்பு அடைந்து இருப்பதை பார்த்தனர். சிறுமியிடம் கேட்டபோது, கடந்த 13-4-2019 அன்று ரெபியுல் மண்டல் வீட்டுக்கு வந்து, செல்போனில் பாடல் கேட்கவைப்பதாக கூறி, பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், சிறுமி சத்தமிட்டதால் சமாதானப்படுத்தி மீண்டும் செல்போனில் பாடல் கேட்க வைத்ததாகவும் தெரிய வந்தது. சிறுமி, பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானதால் உடல்நலம் பாதிக்கப்பட்டதாகவும் தெரிய வந்தது.

எனவே வாலிபர் ரெபியுல் மண்டல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகார் மனுவில் சிறுமியின் பெற்றோர் கேட்டு இருந்தனர்.

தீர்ப்பு

அதன்பேரில் மகளிர் போலீசார் விசாரணை நடத்தி, குற்றம் உறுதி செய்யப்பட்டதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வாலிபர் ரெபியுல் மண்டல் கைது செய்யப்பட்டார். அவர் மீது ஈரோடு மாவட்ட மகளிர் கோர்ட்டில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை நீதிபதி மாலதி விசாரித்து நேற்று தீர்ப்பு கூறினார்.

அதில் குற்றம் சாட்டப்பட்ட மேற்கு வங்காள வாலிபர் ரெபுயுல் மண்டலுக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தார். அபராதம் செலுத்த தவறினால் மேலும் 3 மாதம் ஜெயில் தண்டனை விதிக்க அந்த தீர்ப்பில் கூறி இருந்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய இழப்பீட்டு தொகையாக ரூ.3 லட்சம் வழங்கவும் அரசுக்கு நீதிபதி மாலதி பரிந்துரை செய்து உள்ளார்.

இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் ஜி.டி.ஆர்.சுமதி ஆஜர் ஆனார்.

Next Story