9 மாதங்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகளில் பார்கள் திறப்பு


9 மாதங்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகளில் பார்கள் திறப்பு
x
தினத்தந்தி 30 Dec 2020 10:46 AM IST (Updated: 30 Dec 2020 10:46 AM IST)
t-max-icont-min-icon

டாஸ்மாக் கடைகளில் 9 மாதங்களுக்கு பிறகு பார்கள் திறக்கப்பட்டன.

ஈரோடு,

தமிழகத்தில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. அதன்பிறகு படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதனால் கடந்த மே மாதம் முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. ஆனால் டாஸ்மாக் கடைகளுடன் கூடிய பார்கள் திறக்கப்படவில்லை. எனவே டாஸ்மாக் கடைகளில் மதுவாங்கிய மதுபிரியர்கள் கடைகளுக்கு அருகிலேயே திறந்தவெளியில் நின்று மதுஅருந்தினார்கள். இந்தநிலையில் 9 மாதங்களுக்கு பிறகு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் டாஸ்மாக் கடைகளில் பார்களை திறந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து நேற்று முதல் பார்கள் திறக்கப்பட்டன.

பார்கள்

அந்த பார்களில் மது பிரியர்கள் கட்டாயம் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும், கிருமி நாசினிகளை மது பிரியர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் டாஸ்மாக் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘ஈரோடு மாவட்டத்தில் 213 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் 141 கடைகளில் பார்கள் செயல்பட்டு வருகின்றன. தற்போது 111 பார்கள் திறக்கப்பட்டு உள்ளன. மீதமுள்ள பார்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு விரைவில் திறக்கப்படும்’, என்றனர்.

Next Story