ஓசூர் அருகே சானமாவு காட்டில் 60 யானைகள் தஞ்சம் - பொதுமக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை
ஓசூர் அருகே சானமாவு காட்டில், 60 யானைகள் தஞ்சம் அடைந்துள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துைறயினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள ஊடேதுர்க்கம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 60-க்கும் மேற்பட்ட யானைகள், சானமாவு காட்டுக்கு வந்தன. ஏற்கனவே, 10 யானைகள் அங்கு சுற்றித்திரிகின்றன. தற்போது, 60-க்கும் மேற்பட்ட யானைகள் வந்துள்ளதால் 70 யானைகளும் 2 குழுவாக பிரிந்து கிராமத்தின் அருகே உள்ள ஓடை பகுதியில் தஞ்சமடைந்துள்ளன.
இதுகுறித்து பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் 20-க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் விரைந்து சென்று யானைகளின் நடமாட்டம் குறித்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும், கிராம பகுதிகளில், யானைகள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் அளிக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு வனத்துறையினர் அறிவுறுத்தினர்.
வனப்பகுதியில் முகாமிட்டுள்ள இந்த யானைகள் இரவு நேரங்களில் உணவு தேடி கிராமப்பகுதிகளில் நுழையும் அபாயம் உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பகல் நேரங்களில் விவசாய தோட்டங்களில் பாதுகாப்பாக வேலை செய்ய வேண்டும்.
வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் பொதுமக்கள் நடமாட வேண்டாம். ஆடு, மாடு மேய்க்கவும், விறகு எடுக்கவும் காட்டுப்பகுதிக்கு பொதுமக்கள் செல்லக்கூடாது. வனப்பகுதியில் உள்ள சாலைகளில் வாகனங்களை மெதுவாகவும், எச்சரிக்கையுடனும் இயக்க வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தினர்.
Related Tags :
Next Story