கொரோனா தடுப்பு பணிக்கு ரூ.7,544 கோடி செலவு செய்யப்பட்டது குறித்து வெள்ளை அறிக்கை - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்


கொரோனா தடுப்பு பணிக்கு ரூ.7,544 கோடி செலவு செய்யப்பட்டது குறித்து வெள்ளை அறிக்கை - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 30 Dec 2020 5:55 PM IST (Updated: 30 Dec 2020 5:55 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பு பணிக்கு ரூ.7,544 கோடி செலவு செய்யப்பட்டது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை வடக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தமிழகம் மீட்போம், 2021 சட்டமன்ற பொதுத்தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.

திருவண்ணாமலை திருக்கோவிலூர் ரோடு சாரோனில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் கலைஞர் அரங்கம் உள்பட திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் 39 ஒன்றியங்கள், 4 நகராட்சிகள், 10 பேரூராட்சிகள் உள்பட 250 இடங்களில் காணொலி காட்சி மூலமாக பொதுக்கூட்டம் நடந்தது.

திருவண்ணாமலை மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நடந்த சிறப்பு பொதுக்கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினருமான எ.வ.வேலு எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார். தணிக்கைக்குழு உறுப்பினர் கு.பிச்சாண்டி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். வடக்கு மாவட்ட பொறுப்பாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் வரவேற்றார்.

காணொலி காட்சி மூலமாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

2 நாட்களுக்கு முன்னால் நடந்த கூட்டத்தில் பேசிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க.வை விமர்சிப்பதாக நினைத்துக்கொண்டு தன்னைத்தானே கொச்சைப்படுத்தி இருக்கிறார். கொரோனா காலத்தில் ‘ஒன்றிணைவோம் வா’ என்ற அடிப்படையில் ஒரு திட்டத்தைத் தொடங்கி பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்தோம். அரசாங்கம் செய்ய வேண்டியதை பொதுமக்கள் மனுக்களாக எங்களிடம் கொடுத்தார்கள். அந்த மனுக்களை தலைமைச்செயலாளரைச் சந்தித்து கொடுத்தோம். உரிய மாவட்ட கலெக்டர்களிடம் கொடுத்துவிட்டோம். இவை அனைத்தும் அரசாங்கம் செய்ய வேண்டிய பணிகள். அதனை இந்த அரசு செய்து கொடுத்ததா என்றால் இல்லை. அ.தி.மு.க. அரசு, தி.மு.க. சார்பில் கொடுக்கப்பட்ட கோரிக்கைகளை மதிக்கவில்லை.

தி.மு.க.வை மதிக்கவில்லை என்பதை பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனால் தமிழ்நாட்டு மக்களை எடப்பாடி பழனிசாமி மதித்தாரா? அந்த மக்களால்தான் அவர் முதல்-அமைச்சராக இருக்கிறார், அவர்கள் வாக்களித்ததால்தான் அ.தி.மு.க. ஆளும்கட்சியாக இருக்கிறது. இந்த நன்றியுணர்ச்சி கொஞ்சமாவது அவருக்கு இருந்திருக்க வேண்டும்.

எடப்பாடி பழனிசாமி பேசி இருக்கிறார். ‘‘மக்களிடம் மு.க.ஸ்டாலின் மனுக்களை வாங்கினார். அந்த மனுக்கள் எல்லாம் குப்பைத் தொட்டிக்குத்தான் போனது’’ என்று சொல்லி இருக்கிறார். மக்களிடம் பெற்ற மனுக்களை தலைமைச் செயலாளரிடம்தான் கொடுத்தோம். ஆனால் அது குப்பைத்தொட்டிக்கு போனது என்று எடப்பாடி பழனிசாமி சொல்கிறார் என்றால் அவர் ஆட்சி செய்யும் தலைமை செயலகத்தை குப்பைத்தொட்டி என்கிறாரா?

எதிர்க்கட்சியில் இருக்கும் நாங்கள் மனு வாங்கினால் அதனை சம்பந்தப்பட்ட துறைக்குதான் அனுப்ப முடியும்? அது மக்களுக்கும் தெரியும். இது கூடவா மக்களுக்குத் தெரியாது. அமைச்சரிடம் மனு கொடுப்பதற்கும், எதிர்க்கட்சித் தலைவரிடம் மனு கொடுப்பதற்கும் வித்தியாசம் தெரியாதவர்களா தமிழ்நாட்டு மக்கள்? எங்களைப் பொறுத்தவரை நாங்கள் அரசாங்கத்திடம் தான் கொடுத்துள்ளோம். அரசாங்கம் எங்கள் கைக்கு வந்ததும் அந்த மனுக்கள் தூசி தட்டி எடுக்கப்பட்டு மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.

மீண்டும் கொரோனா பரவுகிறது என்ற அச்சம் தலைதூக்கி வருகிறது. புது வைரஸ் வேறுமாதிரியாக இருப்பதாகவும் சொல்கிறார்கள். அது என்ன மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரியவில்லை. இந்தச்சூழ்நிலையில், மக்கள் எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் இருக்க வேண்டும்.

இங்கிலாந்தில் இப்படி ஒரு புது வகையான வைரஸ் பரவுகிறது என்பதை அறிந்து தமிழக அரசு எச்சரிக்கையாக இருந்ததா என்றால் இல்லை. இங்கிலாந்தில் இருந்து வந்த 800 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்வதற்காக தமிழக அரசு தேடிவருவதாக செய்தி வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் ஒருவருக்கு உருமாறிய கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். அப்படியானால் விமான நிலையங்களில் எந்தப் பரிசோதனையும் செய்வது இல்லையா? நிறுத்திவிட்டீர்களா?. ‘‘யாரும் அச்சப்படத் தேவையில்லை’ என்று முதல்-அமைச்சர் சொல்கிறாரே தவிர, தடுப்புப் பணிகளை அரசு செய்ததாகத் தெரியவில்லை.

கொரோனா கட்டுப்பாட்டு பணிக்கு ரூ.7,544 கோடியை செலவு செய்துள்ளதாக கடந்த 28-ந்தேதி சொல்லி இருக்கிறார்கள். என்னென்ன பணிகளுக்கு எவ்வளவு செலவு செய்துள்ளீர்கள்? அது சம்பந்தமான வெள்ளை அறிக்கையை அரசு வெளியிடவேண்டும். கொரோனாவை கட்டுப்படுத்துகிறோம் என்ற பெயரால் கொள்ளை அடித்துவிடாதீர்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் தெற்கு மாவட்ட அவைத்தலைவர் த.வேணுகோபால், சி.என்.அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, அம்பேத்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், கழக மருத்துவர் அணி துணைத்தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் கு.கருணாநிதி, மாவட்ட பொருளாளர் எஸ்.பன்னீர்செல்வம், நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன், மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவர் பார்வதி சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆரணி தொகுதியில் ஆரணி நகரில் 2 இடங்களிலும், ஆரணி ஒன்றியம், மேற்கு ஆரணி ஒன்றியம், கண்ணமங்கலம் பேரூராட்சி என கிராம பகுதிகளில் மொத்தம் 12 இடங்களில் தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. நகர செயலாளர் ஏ.சி.மணி, ஒன்றிய செயலாளர்கள் டி.தஷ்ணாமூர்த்தி, வெள்ளை கணேசன், எஸ்.எஸ். அன்பழகன், வக்கீல் எம். சுந்தர், மாவட்ட பொறியாளர் பிரிவு செயலாளர் ஆர்.எஸ்.பாபு, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஏ.எம். ரஞ்சித், நகர பொருளாளர் பாலமுருகன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பூக்கடை எம்.பிரகாஷ் உள்பட நிர்வாகிகள் ஒவ்வொரு அரங்கிலும் நூற்றுக்கணக்கானோர் அமர்ந்து பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Next Story