மலேசியாவில் இறந்த வாலிபரின் உடலை மீட்டு தர வேண்டும் - கலெக்டர் அலுவலகத்தில் உறவினர்கள் போராட்டம்


மலேசியாவில் இறந்த வாலிபரின் உடலை மீட்டு தர வேண்டும் - கலெக்டர் அலுவலகத்தில் உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 30 Dec 2020 9:10 PM IST (Updated: 30 Dec 2020 9:10 PM IST)
t-max-icont-min-icon

மலேசியாவில் இறந்தவரின் உடலை மீட்டு தர வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

மதுரை,

மதுரை மேல அனுப்பானடியை சேர்ந்தவர் பூமிநாதன்(வயது 35). இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். பூமிநாதன் மதுரையில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இந்த வருமானம் அவர்களுக்கு போதவில்லை. எனவே பூமிநாதன் வெளிநாட்டில் வேலைக்கு செல்ல முடிவெடுத்து ஒரு தனியார் நிறுவனம் உதவியுடன் மலேசியாவில் உள்ள ஒரு ஓட்டலில் கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வேலைக்கு சென்றார். அங்கிருந்து மாதந்தோறும் மனைவி சாந்திக்கு பணம் அனுப்பி வந்தார். மேலும் மனைவி, குழந்தைகளுடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்தார்.

இந்தநிலையில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு இருந்து பூமிநாதனின் செல்போன் சுவிச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. அதனால் பரிதவித்து போன சாந்தி, தனது கணவன் வேலை செய்து நிறுவனத்திடம் தகவல் கேட்டு உள்ளார். அதற்கு அவர்கள் உங்களது கணவர், மலேசியாவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார் என்று கூறினர். அதனை நம்பிய சாந்தி, மதுரை கலெக்டர் மற்றும் வெளியுறவு துறையிடம், சிறையில் இருக்கும் தனது கணவரை மீட்டு தர வேண்டும் என்று மனு அளித்தார். இந்த மனு குறித்து மலேசியாவில் உள்ள இந்திய தூதுரகம் மூலம் விசாரணை நடத்தப்பட்டது. அதில், பூமிநாதன் மலேசியாவில் உள்ள எந்த சிறையிலும் இல்லை என்று தகவல் கொடுத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சாந்தி, மலேசியாவில் தனது கணவருடன் பணிபுரிந்தவர்களையும் தொடர்ந்து விசாரித்தார். ஆனால் பூமிநாதன் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்தநிலையில், மலேசியாவில் உள்ள ஒருவர் பூமிநாதன் இறந்து விட்டதாக சாந்திக்கு வாட்ஸ்-அப் மூலம் தகவல் அனுப்பி உள்ளார். அதனை கேட்டு அதிர்ச்சிடைந்த சாந்தியும், அவர்களது உறவினர்களும் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். இங்கு அவர்கள் பூமிநாதனின் உடலை இந்தியா கொண்டு வர வேண்டும், அவர் மரணம் குறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி போராட்டம் நடத்தினர்.

பின்னர் அவர்கள் கலெக்டர் அன்பழகனிடம் மனு ஒன்று கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

மலேசியாவில் பணியாற்றி வந்த பூமிநாதன் குறித்து கடந்த 87 நாட்களாக எந்த தகவலும் இல்லை. அவர் சிறையில் இருப்பதாக பூமிநாதன் பணியாற்றிய நிறுவன உரிமையாளர் கோபால் மற்றும் அன்பு, சரவணன், ரோஹன் ஆகிய 4 பேரும் தவறான தகவல் கொடுத்து வந்தனர். தற்போது ரோஹன் என்பவர் பூமிநாதன் இறந்து விட்டதாக கூறுகிறார். எனவே இந்த 4 பேரும் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் அன்பழகன் கூறினார்.

Next Story