கிராமசபை கூட்டங்கள் நடத்த அனுமதி மறுப்பு: போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட தி.மு.க.வினர் முயற்சி - எம்.பி., எம்.எல்.ஏ. உள்பட 600 பேர் கைது
கிராம சபை கூட்டங்களை நடத்த அனுமதி அளிக்க மறுக்கும் போலீசா ரை கண்டித்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற எம்.பி., எம்.எல்.ஏ. உள்பட தி.மு.க.வினர் 600 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை,
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலுக்கு இணங்க தமிழகம் முழுவதும் மக்கள் கிராம சபைக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இது போல் கோவையில் மக்கள் கிராம சபை நடத்த போலீசார் தடை விதித்து தி.மு.க.வினரை கைது செய்து வந்தனர். எனவே கோவை மாநகர போலீசாரை கண்டித்து, கோவை ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க. சார்பில், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை மாலை 4 மணியளவில் முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
எனவே முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், கிணத்துக்கடவு, கவுண்டம்பாளை யம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினரை போலீசார் நேற்றுக்காலையில் கைது செய்தனர். மேலும் போராட்டத்தில் தி.மு.க.வினர் கலந்து கொள்வதை தடுக்கும் வகையில் கோவைக்குள் வரும் சாலைகள் அனைத்திலும் தடுப்புகளை அமைத்து தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை சுற்றி உள்ள செஞ்சிலுவை சங்கம், கலெக்டர் அலுவலகம், அவினாசி சாலை பகுதிகளில் போலீசார் தடுப்புகள் அமைத்திருந்தனர். அதை அகற்றக்கோரி அவினாசி சாலையில் உள்ள அண்ணா சிலையில் இருந்து, நா.கார்த்திக் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க.வினர் நடந்தே போலீஸ் கமிஷனர் அலுவலகம் நோக்கி தமிழக அரசுக்கு எதிராகவும், போலீசாருக்கு எதிராகவும் கோஷமிட்டவாறு வந்தனர்.
அவர்களை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு போலீசார் இரும்பு தடுப்புகளை வைத்து தடுத்து நிறுத்தினார்கள். இதனால், போலீசாருக்கும், தி.மு.க.வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் தி.மு.க.வினர் சாலையில உட்கார்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார் கள். அவர்கள், போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதையடுத்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ., பொள்ளாச்சி தொகுதி எம்.பி. சண்முகசுந்தரம், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, வடக்கு மாவட்ட பொறுப்பாளர் சிஆர்.இராமச்சந்திரன், மாநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பையா கவுண்டர், கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் சேனாதிபதி, தீர்மான குழு இணை செயலாளர் முத்துச்சாமி, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் நாச்சிமுத்து, வடவள்ளி துரைசாமி, வக்கீல் அருள்மொழி, தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.சண்முகசுந்தரம், பொதுகுழு உறுப்பினர் மு.மா.ச.முருகன், மாணவர் அணி வெங்கடேஷ், மாநில மகளிர் அணி துணை செயலாளர் மீனா ஜெயக்குமார் மற்றும் ஒன்றிய செயலாளர்கள், பகுதி பொறுப்பாளர்கள், அணி அமைப்பாளர்கள், மகளிரணியினர் உள்ளிட்ட 600 பேர் கைது செய்யப்பட்டனர்.
முன்னதாக நா.கார்த்திக் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறுகையில், தி.மு.க. சார்பில் நடத்தப்படும் மக்கள் கிராம சபை கூட்டங்கள் நடத்துவதற்கும் தி.மு.க. நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும் போலீசார் அனுமதி கொடுப்பது இல்லை. முதற்கட்டமாக இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. இதே நிலை நீடித்தால், போலீசாரை கண்டித்து தோழமை கட்சிகளுடன் சேர்ந்து தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story