பொது இடங்களில் கூட தடை இரவு ஊரடங்கால் களையிழக்கிறது, புத்தாண்டு கொண்டாட்டம் புதிய வழியில் வரவேற்க தயாராகும் மக்கள்


பொது இடங்களில் கூட தடை இரவு ஊரடங்கால் களையிழக்கிறது, புத்தாண்டு கொண்டாட்டம் புதிய வழியில் வரவேற்க தயாராகும் மக்கள்
x
தினத்தந்தி 31 Dec 2020 6:34 AM IST (Updated: 31 Dec 2020 7:10 AM IST)
t-max-icont-min-icon

இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் மும்பையில் இன்று நள்ளிரவில் புத்தாண்டு கொண்டாட்டம் களையிழக்க உள்ளது. புத்தாண்டு பிறக்கும் வேளையில் புதிய வழியில் வரவேற்க மக்கள் தயாராகி வருகிறார்கள்.

மும்பை, 

மும்பையை கொண்டாட்டங்களின் தலைநகரம் என்று கூறலாம். அனைத்து பண்டிகைகளும் இங்கு வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக அனைத்து தரப்பு மக்களால் கொண்டாடப்படும் புத்தாண்டு பண்டிகை கொண்டாட்டத்தின் போது, மும்பை நகரமே களைகட்டும். முக்கிய பகுதிகள், வணிக வளாகங்கள், கோவில்கள், கட்டிடங்கள் மின்னொளியில் ஜொலிக்கும்.

நள்ளிரவு மும்பை ‘கேட்வே ஆப் இந்தியா’வில் ஆயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு புத்தாண்டை ஆரவாரத்துடன் வரவேற்பார்கள்.

இதேபோல மொின் டிரைவ், சிவாஜி பார்க், ஜூகு கடற்கரை, மார்வே கடற்கரை போன்ற இடங்களிலும் பொதுமக்கள் திரண்டு புத்தாண்டை கொண்டாடுவார்கள். இதுதவிர கோவில், தேவாலயம், மசூதிகளிலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறும். மும்பையில் உள்ள பிரசித்தி பெற்ற சித்தி விநாயகர், பாந்திரா மலை மாதா ஆலயம், ஹாஜிஅலி தா்க்காவிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.

மேலும் ஓட்டல்கள், பார், மதுபான விடுதிகள், ரெசார்ட், தனியார் கிளப்கள், ஜிம்கானாக்கள் போன்ற இடங்களிலும் விடிய, விடிய புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டும்.

இந்த ஆண்டு வழக்கம் போல புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதித்தால் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என மராட்டிய அரசு இரவு நேர ஊரடங்கை பிறப்பித்து உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் இன்று (வியாழக்கிழமை) இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை வீடுகளை விட்டு வெளியே வர முடியாது. சில காரணங்களுக்காக விலக்கு அளிக்கப்பட்டு இருந்தாலும் 5 பேருக்கு மேல் கூட முடியாது.

மேலும் இன்று இரவு 11 மணிக்கு மேல் மக்கள் பொதுஇடங்களில் கூடுவதை தடுக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

இதன் காரணமாக புத்தாண்டை வரவேற்கும் இன்றைய இரவில் சாலைகள் வெறிச்சோடியே காணப்படும் நிலை நிலவுகிறது.

மேலும் ஓட்டல்கள், உணவகங்கள் உள்பட பல பகுதிகள் ஆரவாரமின்றி அடங்கி போக இருக்கிறது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த அரசு விதித்த இரவு நேர ஊரடங்கால் இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டமே களையிழக்க உள்ளது. இங்கிலாந்தில் பரவி வரும் புதுவகை கொரோனாவும் இந்தியாவுக்குள் தலைகாட்டி இருப்பது புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு வேட்டு வைக்க மற்றொரு காரணமாக அமைந்து விட்டது.

பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே குடும்பத்தினருடன் புத்தாண்டை கொண்டாடி மகிழ வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். எனவே சமூக வலைதளங்கள், வீடியோ கால்கள் மூலம் நண்பர்களுக்கு சரியாக நள்ளிரவு 12 மணிக்கு வாழ்த்துகளை கூறிகொள்ள பலர் தயாராகி வருகின்றனர். வலைத்தளங்களில் தங்களது கைவண்ணத்தை காட்டி புத்தாண்டை வரவேற்க புதுப்புது யுக்தியை தேடி வருகிறார்கள்.

இது குறித்து தாதாரை சேர்ந்த சாகர் என்பவர் கூறுகையில், ‘‘ஆண்டு தோறும் புத்தாண்டு அன்று இரவில் நண்பர்கள், குடும்பத்தினருடன் ‘கேட்வே ஆப் இந்தியா’வுக்கு சென்றுவிடுவோம். அதிகாலை 3 அல்லது 4 மணிக்கு தான் வீடு திரும்புவோம். இந்த ஆண்டு கொரோனா காரணமாக எங்கும் செல்ல முடியாது. அடுத்த ஆண்டு எல்லாம் நல்லப்படியாக நடக்கும் என நம்புகிறேன்’’ என்றார்.

Next Story