பொய்சரில் நகைக்கடையில் ரூ.8½ கோடி நகை, பணம் கொள்ளை கியாஸ் கட்டர் மூலம் கதவை உடைத்து கைவரிசை
பொய்சரில் உள்ள நகைக்கடையில் கியாஸ் கட்டர் மூலம் கதவை உடைத்து ரூ.8 கோடியே 60 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளை அடித்த கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
வசாய்,
பால்கர் மாவட்டம் பொய்சரை சேர்ந்தவர் ஸ்ரீராம் பாட்டீல். இவர் சித்தாராலயா பி.ஏ.ஆர்.சி காலனி பகுதியில் மங்களம் ஜூவல்லர்ஸ் என்ற நகைக்கடை நடத்தி வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். நேற்று காலை கடையை திறக்க வந்த போது கடையின் இரும்பு கதவு கியாஸ் கட்டரால் வெட்டப்பட்டு இருந்ததை கண்டு திடுக்கிட்டார். உள்ளே சென்று பார்த்த போது கடையில் இருந்த நகைகள், வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன. மேலும் கல்லா உடைக்கப்பட்டு அதில் இருந்த பணமும் மாயமாகி இருந்தது. இதனால் அதிர்ச்சிக்குள்ளான அவர், சம்பவம் குறித்து உடனடியாக போலீசாரிடம் புகார் அளித்தார்.
இந்த புகாரின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதுடன், அருகில் உள்ள கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.
இதில் அதிகாலை 2.30 மணி அளவில் அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் கியாஸ் கட்டர் மூலம் கதவை உடைத்து உள்ளே இருந்த ரூ.8 கோடி மதிப்புள்ள நகைகள் மற்றும் ரூ.60 லட்சம் ரொக்கத்தை கொள்ளை அடித்து விட்டு தப்பி சென்றது தெரியவந்தது.
இந்த கடையில் நேபாள நாட்டை சேர்ந்த காவலாளி ஒருவர் கடந்த 5-ந்தேதி பணியில் சேர்ந்தார். மேலும் கடையின் 2-வது மாடியில் தங்கி இருந்த அவர் திடீரென தலைமறைவாகி இருப்பதால், அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து போலீசார் காவலாளியையும், கொள்ளை கும்பலையும் வலைவீசி தேடிவருகின்றனர்.
Related Tags :
Next Story