5 பேருக்கு மேல் கூட தடை புத்தாண்டு வாழ்த்து சொல்ல மக்கள் வெளியே வர அனுமதி மந்திரி அனில் தேஷ்முக் தகவல்
புத்தாண்டையொட்டி இன்று இரவு 11 மணிக்கு பிறகு 5 பேருக்கு மேல் கூட தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் மருந்து வாங்கவும், புத்தாண்டு வாழ்த்து சொல்லவும் வெளியே வர அனு மதிக்கப்பட்டு உள்ளது.
மும்பை,
இங்கிலாந்து நாட்டின் புதுவகை கொரோனா இந்தியாவுக்குள்ளும் நுழைந்து உள்ளது. இதற்கிடையே புத்தாண்டையொட்டி மக்கள் பொது இடங்களில் கூடுவதை தடுக்க கடந்த 22-ந் தேதி முதல் வருகிற 5-ந் தேதி வரை இரவு ஊரடங்கு பிறக்கப்பட்டு உள்ளது. அதன்படி இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இந்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புத்தாண்டை வரவேற்கும் வகையில் நள்ளிரவில் மக்கள் பொது இடங்களில் கூடுவது வழக்கம். ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு மக்கள் கூடக்கூடாது என்பதற்காக இரவு ஊரடங்கு போடப்பட்டு உள்ளது. வழக்கம்போல் இன்று இரவும் 11 மணி வரை ஓட்டல், உணவகங்கள், கேளிக்கை விடுதிகள், பார்கள் திறந்து இருக்கலாம். அதற்கு மேல் திறந்து இருக்க அனுமதி இல்லை.
மலை வாசஸ்தலங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் இதனை கண்காணிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
அதேநேரத்தல் இன்று இரவு 11 மணிக்கு மேல் சில விலக்குகளும் அளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி மருத்துவ காரணங்களுக்காக வெளியே செல்லலாம். நண்பர்கள், குடும்பத்தினருக்கு புத்தாண்டு வாழ்த்து சொல்ல வெளியே செல்லலாம். 5 பேர் அல்லது அதற்கு மேற்பட்டோர் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story