காரில் ரகசிய அறை அமைத்து ஆந்திராவில் இருந்து தஞ்சைக்கு கடத்தி வரப்பட்ட 59 கிலோ கஞ்சா பறிமுதல் 3 பேர் கைது


காரில் ரகசிய அறை அமைத்து ஆந்திராவில் இருந்து தஞ்சைக்கு கடத்தி வரப்பட்ட 59 கிலோ கஞ்சா பறிமுதல் 3 பேர் கைது
x
தினத்தந்தி 31 Dec 2020 8:39 AM IST (Updated: 31 Dec 2020 8:39 AM IST)
t-max-icont-min-icon

காரில் ரகசிய அறை அமைத்து ஆந்திராவில் இருந்து தஞ்சைக்கு கடத்தி வரப்பட்ட 59 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக 3 பேரை கைது செய்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சமீப காலமாக கஞ்சா விற்பனை அதிக அளவில் நடந்து வருகிறது. இதையடுத்து போலீசார் அந்தந்த பகுதியில் சோதனை நடத்தி கஞ்சா விற்பனை செய்பவர்களை கைது செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் ஆந்திராவில் இருந்து தஞ்சைக்கு காரில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக திட்டமிட்ட குற்றம் மற்றும் நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், திருச்சி மண்டல துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமையில் தஞ்சை சரக போலீஸ் இன்ஸ்பெக்டர் லக்குமணன், திருச்சி சரக போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சக்திகுமார் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் தஞ்சை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கிப்பட்டி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

காரில் கஞ்சா கடத்தல்

இரவு 10.30 மணி அளவில் சோதனை மேற்கொண்டபோது அந்த வழியாக ஒரு கார் வேகமாக வந்தது. அந்த கார் ஆந்திர மாநில பதிவெண் கொண்ட கார் ஆகும். காரை நிறுத்துமாறு போலீசார் சைகை செய்தனர். ஆனால் கார் நிற்காமல் வேகமாக சென்றது. இதையடுத்து போலீசார் அந்த காரை விரட்டிச்சென்று மடக்கிப்பிடித்தனர்.

பின்னர் காரை போலீசார் சோதனை செய்தனர். அப்போது காரில் ரகசிய அறை அமைத்து அதில் கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து கஞ்சாவையும், காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த கஞ்சாவின் மொத்த எடை 59 கிலோ ஆகும்.

3 பேர் கைது

மேலும் இது தொடர்பாக காரில் இருந்த ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சின்னராஜகுப்பம் பகுதியை சேர்ந்த சிவசங்கர ரெட்டி (வயது 49), ஒடிசா மாநிலம் பலேஸ்வர் மாவட்டம் முலக்குடே கிராமத்தை சேர்ந்த திவாகரசில்லா(37), பெரம்பலூர் மாவட்டம் ஈச்சம்பட்டி அம்பேத்கர் காலனியை சேர்ந்த பிரபு(27) ஆகிய 3 பேரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதன் பின்னர் அவர்கள் மூவரும் நாகை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு பரத்சீனிவாசனிடம் ஒப்படைக்கப்பட்டனர். அதன் பேரில் அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story