தூத்துக்குடி பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பரிசோதனை; கலெக்டர் செந்தில்ராஜ் நேரில் ஆய்வு
தூத்துக்குடி பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பெல் நிறுவன என்ஜினீயர்கள் மூலம் பரிசோதனை நடப்பதை கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார்.
வாக்குப்பதிவு எந்திரங்கள்
தூத்துக்குடி பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு பயன்படுத்துவதற்காக 2 ஆயிரத்து 795 கட்டுப்பாட்டு எந்திரங்கள், 3 ஆயிரத்து 368 வாக்குப்பதிவு எந்திரங்கள், 3 ஆயிரத்து 36 வாக்குச்சீட்டு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன. இந்த எந்திரங்கள் பெல் நிறுவன என்ஜினீயர்கள் அமித்கோசல், ரவிந்தர்சிங், ஹெரிமங்குபி உள்ளிட்டோர் அடங்கிய குழு மூலம் முதல் கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆய்வு
இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, இந்த பணிக்கு வரும் பணியாளர்கள் மற்றும் கண்காணிக்க வரும் அரசியல் கட்சி பிரமுகர்களை முழுமையாக பரிசோதனை செய்து அனுப்ப வேண்டும்.
பரிசோதனை அரங்குக்குள் செல்போன் கொண்டு செல்ல அனுமதிக்க கூடாது. தேர்தல் ஆணையத்தில் வகுத்துள்ள விதிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். உள்ளே வரும் அனைவரும் முகக்கவசம் மற்றும் சாணிடைசர் பயன்படுத்த வேண்டும். கொரோனா விதிமுறையை முழுமையாக பின்பற்ற வேண்டும்’ என்று அறிவுறுத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு எந்திரம், கட்டுப்பாட்டு கருவி, வாக்குப்பதிவு சரிபார்ப்பு எந்திரம் ஆகியவை மராட்டிய மாநிலத்தில் இருந்து வந்து உள்ளன. அதுமட்டுமின்றி ஏற்கனவே நடந்த ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் இடைத்தேர்தலில் பயன்படுத்திய வாக்குப்பதிவு எந்திரம், கட்டுப்பாட்டு கருவி, வாக்குப்பதிவு சரிபார்ப்பு எந்திரம் ஆகிய எந்திரங்கள் காப்பு அறையில் இருப்பு வைக்கப்பட்டு உள்ளன.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுத்தலின்படி அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் காப்பு அறையை திறந்து ஒவ்வொரு எந்திரங்களும் முதல்கட்ட பரிசோதனை செய்யப்படுகிறது. அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெறும் இந்த பணிகள் முழுவதும் வீடியோ எடுக்கப்படுகிறது. மேலும் வெப் கேமரா மூலம் மாநில தேர்தல் ஆணையத்துக்கு இங்கு நடைபெறும் பணிகள் அனைத்தும் தெரிவித்து வருகிறோம்.
வாக்குச்சாவடிகள்
தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 1,603 வாக்குச்சாவடிகள் உள்ளன. மாவட்டத்தில் உள்ள வாக்குப்பதிவு மையங்களைவிட 140 சதவீதம் அதிகமான கட்டுப்பாட்டு எந்திரம், 170 சதவீதம் அதிகமான வாக்குப்பதிவு எந்திரம், வாக்குப்பதிவு சரிபார்ப்பு எந்திரம் என்ற அடிப்படையில் இருப்பு வைத்துள்ளோம். பெல் நிறுவன என்ஜினீயர்கள் அனைத்து எந்திரங்களையும் பரிசோதனை செய்த பிறகு, அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாதிரிவாக்குப்பதிவு செய்து சரியாக உள்ளதா? என்று பரிசோதித்து, அனைவரின் முன்பும் சீல் செய்து மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைப்பார்கள். அவை அனைத்தையும் காப்பு அறையில் இருப்பு வைக்கப்படும். முதல்நிலை பரிசோதனை செய்யப்பட்ட எந்திரங்கள் தேர்தல் ஆணையத்தின் இ.எம்.எஸ். மென்பொருளில் பதிவேற்றம் செய்து தேர்தல் ஆணையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்படும். அதுபோல் பரிசோதனை செய்து சரியாக உள்ள எந்திரங்கள் குறித்து அரசியல் கட்சிகளுக்கும் தெரிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது, கூடுதல் கலெக்டர் (வருவாய்) விஷ்ணுசந்திரன், உதவி கலெக்டர் சிம்ரான்ஜீத் சிங் கலோன், கீதாஜீவன் எம்.எல்.ஏ, அ.தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் சந்தானம், பி.எஸ்.பி. அசோக்குமார், தேர்தல் பிரிவு தனிதாசில்தார் ரகு, தூத்துக்குடி தாசில்தார் ஜஸ்டின், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சித்தார்த்தன், வசந்தி மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story