கோவை வால்பாறையில் பட்டப்பகலில் அட்டகாசம்: காட்டுயானை தாக்கி பெண் பலி
வால்பாறையில் காட்டுயானை தாக்கி பெண் பலியானார்.
பச்சை தேயிலை பறிக்கும் பணி
கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை தோட்டங்கள் அதிகளவில் உள்ளன. அதனை சுற்றி அடர்ந்த வனப்பகுதிகள் காணப்படுகிறது. இந்த வனப்பகுதிகளில் காட்டுயானை, காட்டெருமை, சிறுத்தைப்புலி உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. வனப்பகுதிகளில் உணவு மற்றும் தண்ணீரை தேடி அலையும் காட்டுயானைகள் தேயிலை தோட்டங்களிலும், அதனருகில் வசித்து வரும் தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதிகளிலும் புகுந்து அட்டகாசம் செய்வது வாடிக்கையாகி விட்டது.
இந்த நிலையில் வால்பாறை அருகே உள்ள நல்லகாத்து எஸ்டேட் 1-வது பிரிவில் 44-ம் நெம்பர் தோட்ட பகுதியில் நேற்று வழக்கம்போல் பெண் தொழிலாளர்கள் பச்சை தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் அந்த தோட்டத்தில் இருந்து பக்கத்து தோட்டத்துக்கு நடந்து சென்றனர்.
காட்டுயானை தாக்கியது
அப்போது அங்கு குட்டியுடன் கூடிய 3 காட்டுயானைகள் வந்தன. இதை கண்ட தொழிலாளர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். தொடர்ந்து அதில் ஒரு காட்டுயானை திடீரென தொழிலாளர்களை விரட்ட தொடங்கியது. இதனால் பீதி அடைந்த அவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். ஆனால் ஜெயமணி(வயது 56) என்ற தொழிலாளி, காட்டுயானையிடம் சிக்கினார். அவரை காட்டுயானை காலால் மிதித்தது. இதில் பலத்த காயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதற்கிடையில் உயிர் தப்பிய தொழிலாளர்கள், மானாம்பள்ளி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வனத்துறையினரும், போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஆனால் ஜெயமணியின் உடலை எடுக்க விடாமல், காட்டுயானை அங்கேயே ஆக்ரோஷமாக நின்றிருந்தது. மேலும் உடலை எடுக்க முயன்றவர்களை துரத்தியது. எனினும் சில மணி நேரத்துக்கு பிறகு காட்டுயானையை கூச்சலிட்டு விரட்டியடித்தனர்.
நிவாரண தொகை
அதன்பிறகு ஜெயமணியின் உடலை மீட்டு வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனைக்கு பிறகு உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக ஜெயமணியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற கஸ்தூரிவாசு எம்.எல்.ஏ., உதவி வன பாதுகாவலர் பிரசாந்த் ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அப்போது ஜெயமணியின் மகனுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று உறவினர்கள் வலியுறுத்தினர். அதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எம்.எல்.ஏ உறுதி அளித்தார். மேலும் வனத்துறை சார்பில் முதற்கட்ட நிவாரண தொகையாக ரூ.50 ஆயிரத்துக்கான காசோலை ஜெயமணியின் குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story