குடகனாற்றில் கடைமடை வரை தண்ணீர் கேட்டு விவசாயிகள் மோட்டார்சைக்கிளில் ஊர்வலம்; போலீசார் தடுத்ததால், கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்


திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு, வேடசந்தூர் குடகனாறு பாசன விவசாயிகள் மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக வந்தபோது
x
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு, வேடசந்தூர் குடகனாறு பாசன விவசாயிகள் மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக வந்தபோது
தினத்தந்தி 31 Dec 2020 10:08 AM IST (Updated: 31 Dec 2020 10:08 AM IST)
t-max-icont-min-icon

குடகனாற்றில் கடைமடை வரை தண்ணீர் கேட்டு மோட்டார் சைக்கிளில் விவசாயிகள் ஊர்வலமாக வந்தனர். போலீசார் தடுத்ததால் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

கடைமடைக்கு தண்ணீர் கேட்டு
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில் உருவாகும் குடகனாறு பல்வேறு கிராமங்கள் வழியாக 110 கி.மீ. தூரம் பயணித்து, கரூர் அமராவதி ஆற்றில் கலக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்து விட்டது. இதனால் குடகனாறு வறண்டு பாசன பகுதிகளில் விவசாயம் பாதிக்கப்பட்டதோடு, குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆனால், இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்தது.

இதனால் குடகனாற்றில் தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது. ஆனால், ஆத்தூரில் தடுப்பணை கட்டப்பட்டதால், பிற பகுதிகளுக்கு தண்ணீர் செல்கிறது. இதனால் குடகனாற்றில் குறைந்த அளவே தண்ணீர் வருகிறது. எனவே, குடகனாற்றில் கடைமடை வரை தண்ணீர் வரவில்லை என்பது விவசாயிகளின் ஆதங்கமாக உள்ளது. எனவே, கடைமடை வரை சேரும் வகையில் குடகனாற்றில் தண்ணீர் திறக்க வேண்டும். குடகனாற்றில் மணல் திருட்டை தடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி குடகனாற்றை பாதுகாக்க வேண்டும் என்று குடகனாறு பாதுகாப்பு சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.

மோட்டார்சைக்கிளில் ஊர்வலம்
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கூம்பூரில் இருந்து ஆத்தூர் வரை விவசாயிகள், பொதுமக்கள் நேற்று மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக புறப்பட்டனர். இதில் கூம்பூர், வேடசந்தூர், அகரம், தாடிக்கொம்பு, ஈசநத்தம், அரவக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 250 பேர் பங்கேற்றனர். இந்த ஊர்வலம் கலெக்டர் அலுவலகம் அருகே வந்த போது போலீசார் தடுத்து நிறுத்தினர்.

மேலும் மோட்டார்சைக்கிளில் ஊர்வலமாக செல்ல அனுமதி அளிக்க மறுத்தனர். இதையடுத்து விவசாயிகள் தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தியும், குடகனாற்றை பாதுகாக்க கோரியும் கோ‌‌ஷமிட்டனர். பின்னர் கோரிக்கைகள் தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

Next Story