சின்னசேலம் பகுதியில் பூட்டிய வீடுகளில் கைவரிசை காட்டிய பிரபல கொள்ளையன் கைது


சின்னசேலம் பகுதியில் பூட்டிய வீடுகளில் கைவரிசை காட்டிய பிரபல கொள்ளையன் கைது
x
தினத்தந்தி 31 Dec 2020 10:17 AM IST (Updated: 31 Dec 2020 10:17 AM IST)
t-max-icont-min-icon

சின்னசேலம் பகுதியில் பூட்டிய வீடுகளில் கைவரிசை காட்டிய பிரபல நகை கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். இவனிடம் இருந்து ரூ.20 லட்சம் மதிப்புள்ள 46 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சின்னசேலம்,

சின்னசேலம் அருகே மேலூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜமாணிக்கம்(வயது 67). ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலரான இவரும், இவரது மனைவியும் மேலூரில் தனியாக வசித்து வந்தனர். சம்பவத்தன்று கணவன், மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 15 பவுன் நகைகளை மர்ம நபர்கள் யாரோ கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

அடுத்தடுத்து சம்பவம்

பின்னர் இதுகுறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்துச்சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வந்தனர். இதைத் தொடர்ந்து நாரியப்பனூர், ராயப்பனூர், அம்மையகரம், கீழ்குப்பம் ஆகிய கிராமங்களில் பூட்டியிருந்த வீடுகளில் நகை கொள்ளை சம்பவம் அரங்கேறியது. பூட்டிய வீடுகளில் அடுத்தடுத்து நடந்த கொள்ளை சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு

எனவே பூட்டிய வீடுகளில் கைவரிசை காட்டிய கொள்ளையர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் உத்தரவிட்டார். அதன் பேரில் கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன் மேற்பார்வையில் குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆரோக்கியதாஸ், முருகன், மனோகரன், மற்றும் ஏட்டு தங்கதுரை ஆகியோரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடிவந்தனர். இந்த நிலையில் நேற்று சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் ஆகியோர் மூங்கில்பாடி சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணான பதிலை அளித்தார்.

கொள்ளையன் கைது

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த நபரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே அம்மம்பாளையம் கல் ஒட்டர் தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் வெங்கடேசன்(25) என்பதும், சின்னசேலம் பகுதியில் உள்ள மேலூர், மேல் நாரியப்பனூர், கீழ்குப்பம், ராயப்பனூர், அம்மையகரம் ஆகிய கிராமங்களில் பூட்டிய வீடுகளிலும், தியாகதுருகம், கள்ளக்குறிச்சி போலீஸ் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதிகளிலும் வீடுகளில் கொள்ளையடித்ததும் தெரியவந்தது. இதையடுத்து வெங்கடேசனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 46 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.20 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

Next Story