திம்பம் மலைப்பாதையில் பழுதாகி நின்ற லாரி; 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு


திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து கிடந்ததை படத்தில் காணலாம்
x
திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து கிடந்ததை படத்தில் காணலாம்
தினத்தந்தி 31 Dec 2020 11:13 AM IST (Updated: 31 Dec 2020 11:13 AM IST)
t-max-icont-min-icon

திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதாகி நின்றதால் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திம்பம் மலைப்பாதை
சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்த மலைப்பாதை வழியாக தமிழ்நாட்டில் இருந்து எப்போதும் பஸ், கார், இருசக்கர வாகனங்கள் சென்று வந்தபடி இருக்கும்.

ஆனால் அதிக பாரம் ஏற்றி வரும் லாரிகள் அடிக்கடி கொண்ைட ஊசி வளைவுகளில் திரும்ப முடியாமல் நின்று விடுகின்றன. இதனால் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் திம்பம் மலைப்பாதையில் நாள்தோறும் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

விறகு பார லாரி
இந்தநிலையில் நேற்று அதிகாலை 5 மணியளவில் தாளவாடி அருகே உள்ள தலமலையில் இருந்து கோபிக்கு விறகு பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்றது.

திம்பம் மலைப்பாதையின் 9-வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது லாரி பழுதாகி நின்றுவிட்டது.

இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் இருபுறமும் பல கிலோ மீட்டருக்கு அணிவகுத்து நின்றன. இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஆசனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பயணிகள் கேள்வி
அதன்பின்னர் பண்ணாரியில் இருந்து கிரேன் வரவழைக்கப்பட்டு காலை 10 மணியளவில் லாரி சாலை ஓரமாக இழுத்துவரப்பட்டது. அதன்பிறகே வாகனங்கள் செல்லத்தொடங்கின. இதனால் திம்பம் மலைப்பாதையில் சுமார் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

திம்பம் மலைப்பாதையில் அதிக பாரம் ஏற்றி வரும் லாரிகளை போக்குவரத்து போலீசார் தடுக்காமல் ஏன் அனுமதிக்கிறார்கள்? என்று பயணிகள் கேள்வி எழுப்பி உள்ளார்கள்.

லாரி கவிழ்ந்தது
இதேபோல் கர்நாடக மாநிலம் சென்றாய் பட்டணத்தில் இருந்து திண்டுக்கலுக்கு தேங்காய் மட்டை பாரம் ஏற்றிக்கொண்டு, நேற்று மதியம் 12 மணியளவில் திம்பம் மலைப்பாதையை ஒரு லாரி கடந்தது. 18-வது கொண்டை ஊசி வளைவு அருகே செல்லும் போது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலை ஓரத்தில் கவிழ்ந்தது. இதில் டிரைவர் ரமேசுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவ்வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்கள். சாலை ஓரத்தில் லாரி கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து ஆசனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story