சென்னிமலை அருகே பொங்கல் பரிசு டோக்கனை அ.தி.மு.க.வினர் வழங்குவதாக கூறி தி.மு.க.வினர் சாலை மறியல்


அ.தி.மு.க.வினர் வீடு வீடாக பொங்கல் பரிசு டோக்கன் வழங்குவதாக கூறி சென்னிமலை அருகே தி.மு.க.வினர் சாலை மறியல்
x
அ.தி.மு.க.வினர் வீடு வீடாக பொங்கல் பரிசு டோக்கன் வழங்குவதாக கூறி சென்னிமலை அருகே தி.மு.க.வினர் சாலை மறியல்
தினத்தந்தி 31 Dec 2020 11:42 AM IST (Updated: 31 Dec 2020 11:42 AM IST)
t-max-icont-min-icon

சென்னிமலை அருகே பொங்கல் பரிசு டோக்கனை அ.தி.மு.க.வினர் வழங்குவதாக கூறி தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.

பரிசு டோக்கன்
சென்னிமலையில் உள்ள சென்டெக்ஸ் நெசவாளர் கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான 6 ரேஷன் கடைகள் முகாசிபிடாரியூர் ஊராட்சியில் செயல்பட்டு வருகிறது.

இந்த ரேஷன் கடைகளில் அரிசி வாங்கும் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசாக ரூ.2 ஆயிரத்து 500 வழங்குவதற்கு ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் வீடு, வீடாக டோக்கன் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. ரேஷன் கடை ஊழியரோடு அ.தி.மு.க.வினரும் வீடு, வீடாக சென்று டோக்கன் வழங்குவதாக கூறி நேற்று காலை 9 மணியளவில் சென்னிமலை-பெருந்துறை ரோட்டில் 1010 நெசவாளர் காலனி பிரிவில் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.

போக்குவரத்து பாதிப்பு
சென்னிமலை கிழக்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் சி.பிரபு போராட்டத்துக்கு தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் எஸ்.பொன்னுசாமி, முகாசிபிடாரியூர் ஊராட்சி துணை தலைவர் சதீஷ் உள்பட பலர் இந்த சாலை மறியலில் பங்கேற்றார்கள். இதனால் அந்த வழியாக சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது பெருந்துறை வட்ட வழங்கல் அதிகாரி செல்வகுமார் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என சாலை மறியலில் ஈடுபட்டிருந்தவர்கள் கோரிக்கை விடுத்தார்கள்.

பேச்சுவார்த்தை
அதன்பேரில் பெருந்துறை வட்ட வழங்கல் அதிகாரி செல்வகுமார் முகாசிபிடாரியூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, சென்னிமலை ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ப.கோபாலகிருஷ்ணன், துணை செயலாளர் தம்பிதுரை, ஒன்றிய கவுன்சிலர் சிவசுப்பிரமணியம், முகாசிபிடாரியூர் ஊராட்சித் தலைவர் கேபிள் நாகராஜ் ஆகியோர் வட்ட வழங்கல் அதிகாரி செல்வகுமாரிடம், அ.தி.மு.க.வினர் யாரும் வீடு, வீடாக டோக்கன் வழங்க செல்லவில்லை. கூட்டுறவு சங்கத்தின் தலைவர் என்ற முறையில் அதன் தலைவர் ஒருவர் மட்டும்தான் உடன் சென்றார் என கூறினார்கள். ஆனால் அதற்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் கட்சியினர் யாரும் வீடு, வீடாக டோக்கன் கொடுக்க செல்ல மாட்டார்கள் என வட்ட வழங்கல் அதிகாரி உறுதி அளித்தார். இதனால் இரு தரப்புக்கும் இடையே சமாதானம் ஏற்பட்டது.

Next Story