வளையப்பட்டியில், வெங்காய ஆராய்ச்சி நிலையம் அமைக்க வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை


வளையப்பட்டியில், வெங்காய ஆராய்ச்சி நிலையம் அமைக்க வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 31 Dec 2020 3:04 PM GMT (Updated: 31 Dec 2020 3:04 PM GMT)

வளையப்பட்டியில் வெங்காய ஆராய்ச்சி நிலையம் அமைக்க வேளாண்மைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் மெகராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஏற்கனவே கடந்த நவம்பர் மாதம் விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட 56 மனுக்களில் 45 மனுக்களுக்கு பதில் அளிக்கப்பட்டு உள்ளதாகவும், 11 மனுக்கள் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நடந்த கூட்டத்தின் விவாதங்கள் பின்வருமாறு:-

தமிழக விவசாயிகள் சங்க தலைவர் சுந்தரம்:- பாலை கொடுக்கும் விவசாயிகளுக்கு, சரியான விலை கிடைக்காததால் நஷ்டம் அடைந்து வருகின்றனர். குறைந்தபட்சம் பாலுக்கு ரூ.5 உயர்த்தி தர அரசுக்கு சிபாரிசு செய்ய வேண்டும். மேலும் பாலை திருப்பி அனுப்பாமல் இருக்கவும் ஆவன செய்ய வேண்டும். மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஏரிகளில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆவின் பொதுமேலாளர் டாக்டர் சுந்தரவடிவேலு:- பாலுக்கு விலையை உயர்த்துவது அரசின் கொள்கை முடிவாகும். ஏற்கனவே முதல்-அமைச்சரிடம் மனு கொடுக்கப்பட்டு உள்ளதால், அந்த கோரிக்கை பரிசீலனையில் உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் 1 லட்சத்து 55 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. தரமான பால் அனைத்தும் கொள்முதல் செய்யப்படும்.

விவசாயி ராஜேந்திரன்:- பிற மாநிலங்களை போல பாலின் தரத்தை பரிசோதிக்க ஐ.எஸ்.ஐ. பார்முலாவை தமிழகத்திலும் பயன்படுத்த வேண்டும். 100 நாள் வேலைத்திட்டத்திற்கு பெண்கள் சென்றுவிடுவதால் விவசாயம் செய்ய முடிவதில்லை. தை மற்றும் மாசி மாதங்கள் அறுவடைக் காலம் மட்டுமின்றி, மீண்டும் பயிரிடும் காலம் ஆகும். எனவே அந்த 2 மாதங்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தை ரத்து செய்து சட்டபூர்வமாக செயல்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் விவசாய பணிகள் பாதிப்பின்றி நடைபெறும்.

மாவட்ட வருவாய் அலுவலர் துர்கா மூர்த்தி:- பரிசீலனை செய்யப்படும்.

விவசாயி பாலசுப்ரமணியம்:- நாமக்கல் மாவட்டத்தில் ஏற்றுமதி தகவல் மையம் அமைத்து தர வேண்டும். மேலும் வளையப்பட்டியில் வெங்காய ஆராய்ச்சி நிலையம் அமைக்க வேளாண்மைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்ட வருவாய் அலுவலர் துர்கா மூர்த்தி:- பரிசீலனை செய்யப்படும்.

விவசாயி குப்புதுரை:- காவிரி கரை ஓரத்தில் வணிக வியாபாரிகளால் கிணறு அமைக்கப்பட்டு தண்ணீர் திருடப்படுகிறது. காவிரியில் இருந்து ஒரு சொட்டு நீர் கூட திருடு போக மாவட்ட நிர்வாகம் அனுமதிக்கக் கூடாது. பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை மற்றும் மின்சார வாரிய அதிகாரிகளை கொண்டு ஆய்வு நடத்தி அதை தடுத்து நிறுத்த வேண்டும். வெல்லம் தயாரிப்பில் அஸ்கா கலப்படம் செய்யப்படுவதால், கரும்பு விவசாயிகளுக்கு சரியான விலை கிடைப்பதில்லை. கலப்படம் செய்பவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை வழங்க வேண்டும்.

துறை அதிகாரி:-உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயி பெரியசாமி:- வழக்கமாக ராஜ வாய்க்காலில் மார்ச் மாதம் 1-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை தண்ணீர் நிறுத்தப்படும். ஏற்கனவே 7 மாதங்கள் நிறுத்தப்பட்டுவிட்டதால், இந்த ஆண்டு தண்ணீரை நிறுத்தக்கூடாது.

மாவட்ட வருவாய் அலுவலர்:- பரிசீலனை செய்யப்படும்.

விவசாயி நல்லாக்கவுண்டர்:- மத்திய அரசு கொண்டு வந்து உள்ள புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானது. அதனால் தமிழகத்தில் ஏற்கனவே சிறப்பாக செயல்பட்டு வரும் 300 ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் இல்லாமல் போய்விடும்.

அதிகாரி:-பரிசீலனை செய்யப்படும்.

இவ்வாறு விவாதங்கள் நடந்தன.

கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குனர் அசோகன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சுந்தரராஜன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பாலமுருகன், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் முருகேசன், தோட்டக்கலை இணை இயக்குனர் கணேசன், உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் ‌அருண், மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் பாலசுப்பிரமணியம், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் பொன்னுவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story