வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி முதல்-அமைச்சர் வீட்டை பொதுமக்கள் முற்றுகையிட முயற்சி - சேலத்தில் பரபரப்பு


வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி முதல்-அமைச்சர் வீட்டை பொதுமக்கள் முற்றுகையிட முயற்சி - சேலத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 31 Dec 2020 8:52 PM IST (Updated: 31 Dec 2020 8:52 PM IST)
t-max-icont-min-icon

வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டை பொதுமக்கள் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்,

சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட பெரியசோரகை பூமி ரெட்டிப்பட்டி காலனியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று சேலத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் சூரமங்கலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டை முற்றுகையிட முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பொதுமக்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது அவர்கள் பெரிய சோரகை கிராமத்தில் இருந்து வந்திருப்பதாகவும், வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி பலமுறை கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் விண்ணப்பித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் முதல்-அமைச்சரை நேரில் சந்தித்து மனு கொடுக்க வந்ததாக தெரிவித்தனர்.

அந்த சமயத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய புறப்பட்டு சென்றார். ஆனால் முதல்-அமைச்சரை பார்க்க போலீசார் அனுமதிக்காததால் மனு கொடுக்க வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இதுகுறித்து பெரியசோரகை கிராம மக்கள் கூறியதாவது:-

பெரியசோரகை பூமிரெட்டிப்பட்டியில் 300-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. குறிப்பாக வீட்டு மனைப்பட்டா கேட்டு அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சிறிய வீட்டில் 5 பேருக்கு மேல் இருக்க முடியாத நிலை இருக்கிறது. நிலம் வாங்கும் வசதியும் எங்களிடம் இல்லை. சமீபத்தில் எங்கள் பகுதிக்கு முதல்-அமைச்சர் வந்தபோது மனு கொடுத்தோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே 10 நாட்களுக்குள் எங்களது கோரிக்கையை முதல்-அமைச்சர் நிறைவேற்றி தரவேண்டும். இல்லையென்றால் மீண்டும் முதல்-அமைச்சர் வீட்டிற்கு வந்து உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொள்வோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story