சதுப்பு நில காடுகள் கொண்ட காரங்காடு சுற்றுலா மையத்தில் நாளை முதல் மீண்டும் படகு சவாரி
சதுப்பு நில காடுகள் கொண்ட காரங்காடு சூழல் சுற்றுலா ைமயத்தில் நாளை (1-ந் தேதி) முதல் படகு சவாரி மீண்டும் தொடங்கப்படுகிறது.
தொண்டி,
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ளது, காரங்காடு. இந்த கிராமத்தில் இயற்கை தந்த கொடையாக அமைந்துள்ள கடற்கரை பகுதிகளில் உள்ள சதுப்புநில காடுகள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக காட்சி அளித்து வருகிறது. மேலும் இந்த காடுகளில் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கவும், வசிக்கவும் உகந்த இடமாக கருதி இங்கு பல நாடுகளில் இருந்து ஆண்டுதோறும் வரும் பறவைககளை காணவும் அதன் அழகை ரசிக்கவும் தினமும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகின்றனர்.
இதனால் வனத்துறை, கிராம மக்களுடன் இணைந்து இங்கு சூழல் சுற்றுலா மேம்பாட்டு மையம் செயல்படுத்தி வருகிறது. மேலும் இங்கு வரும் சுற்றுலா பயணிகளை கவர வனத்துறை சூழல் சுற்றுலா மேம்பாட்டு மையம் மூலம் படகு சவாரி தொடங்கப்பட்டது. இதனையொட்டி படகு சவாரி செய்ய இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் கொரோனா தொற்றால் நாடு முழுவதும் உள்ள சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன.
அதன் அடிப்படையில் காரங்காடு சூழல் சுற்றுலா மையமும் மூடப்பட்டது. தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ள நிலையில் சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் வருகிற புத்தாண்டு (நாளை) முதல் புதிய கட்டுப்பாட்டு விதிகளுடன் காரங்காடு சூழல் சுற்றுலா மையம் தொடங்கப்பட உள்ளதாக ராமநாதபுரம் வன உயிரின காப்பாளர் மாரிமுத்து அறிவித்துள்ளார்.
இது குறித்து ராமநாதபுரம் வனச்சரக அலுவலர் சதீஷ் கூறியதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சதுப்பு நிலக்காடுகளையொட்டி அமைந்துள்ள காரங்காடு சூழல் சுற்றுலா மையம் பொதுமக்களின் வேண்டுகோளின்படி வருகிற 1-ந் தேதி (நாளை) முதல் பொதுமக்களுக்காக திறக்கப்பட உள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு உடல் வெப்பநிலைைய சரிபார்ப்பதுடன் அனைவரும் முககவசம், கிருமிநாசினி கட்டாயம் பயன்படுத்தவேண்டும்.
மேலும் சமூக இடைவெளியை பின்பற்றப்படும். இந்த சூழல் சுற்றுலா மையத்தில் சுற்றுலா பயணிகளுக்காக படகு சவாரி, கயாக்கிங், நீரில் மூழ்கி பார்த்தல் போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. படகு சவாரி கட்டணம் ரூ.200 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது, உயிர் பாதுகாப்பு கவசத்துடன் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக படகு சவாரிக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.
முன்பதிவு அடிப்படையில் சுவையான மீன் சாப்பாடு, நண்டு சூப், கணவாய் கட்லெட், நன்னாரி சர்பத் போன்றவை சுற்றுலா பயணிகளுக்கு கட்டணத்துடன் வழங்கப்படும். சுற்றுலாவோடு இங்குள்ள சதுப்புநில காடுகளை பாதுகாப்பதின் நோக்கத்தையும் புரிந்துகொள்ள இந்த சூழல் சுற்றுலா வழிவகுக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story