தேர்வாய்கண்டிகை, செம்பரம்பாக்கம் ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை; தண்ணீர் இருப்பு 10.85 டி.எம்.சி. ஆக உயர்வு


செம்பரம்பாக்கம் ஏரி
x
செம்பரம்பாக்கம் ஏரி
தினத்தந்தி 1 Jan 2021 4:50 AM IST (Updated: 1 Jan 2021 4:50 AM IST)
t-max-icont-min-icon

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஏரிகளின் மொத்த தண்ணீர் இருப்பு 10.85 டி.எம்.சி.யாக உயர்ந்து உள்ளது.

குடிநீர் ஏரிகள்
சென்னை புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு மிதமான மழை பெய்தது. குறிப்பாக கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை நீர் தேக்கம் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்தது. தேர்வாய்கண்டிகை பகுதிகளில் 2 மில்லி மீட்டரும், செம்பரம்பாக்கம் பகுதிகளில் 10 மில்லி மீட்டர், கிருஷ்ணா நதிநீர் கால்வாய் மூலம் வரும் நீர் நம் மாநிலத்தின் நுழையும் பகுதியில் 2 மில்லி மீட்டர் என்ற அளவில் மழை பதிவானது.

தொடர்ந்து வரும் நாட்களிலும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு மேலும் தண்ணீர் வருவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

நிரம்பும் நிலை
நேற்றைய நிலவரப்படி, பூண்டியில் 3 ஆயிரத்து 135 மில்லியன் கன அடி (3.13 டி.எம்.சி.), சோழவரம் 875 மில்லியன் கன அடி, புழல் 3 ஆயிரத்து 120 மில்லியன் கன அடி (3.12 டி.எம்.சி.), கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகையில் 373 மில்லியன் கன அடியும், செம்பரம்பாக்கம் ஏரியில் 3 ஆயிரத்து 347 மில்லியன் கன அடி (3.34 டி.எம்.சி.) உள்ளது. 11 ஆயிரத்து 757 மில்லியன் கன அடி (11.75 டி.எம்.சி.) கொள்ளளவு கொண்ட அனைத்து ஏரிகளிலும் சேர்த்து தற்போது 10 ஆயிரத்து 850 மில்லியன் கன அடி (10.85 டி.எம்.சி.) அதாவது 92.29 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. மேலும் 907 மில்லியன் கன அடி நீர் வந்தால் அனைத்து ஏரிகளும் நிரம்பி விடும் நிலை உள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் அனைத்து ஏரிகளிலும் சேர்த்து 5 ஆயிரத்து 635 மில்லியன் கன அடி (5.63 டி.எம்.சி.) மட்டுமே நீர் இருப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேற்கண்ட தகவலை சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Next Story