2019-ம் ஆண்டை விட 2020-ம் ஆண்டில் சென்னையில் குற்றங்கள் குறைந்தன; விபத்து உயிரிழப்புகளும் குறைவு
சென்னையில் 2019-ம் ஆண்டை விட 2020-ம் ஆண்டில் குற்றங்கள் வெகுவாக குறைந்துள்ளன. விபத்து உயிரிழப்புகளும் குறைந்தன.
குற்றங்கள் குறைவு
2020-ம் ஆண்டு விடைபெற்று, 2021-ம் ஆண்டு இன்று (வெள்ளிக்கிழமை) பிறந்தது. கொரோனா கொடிய நோய் தாக்குதல் காரணமாக ஊரடங்கு அமலில் இருந்தது. மக்களை வீடுகளிலேயே முடக்கியது. இதோடு, போலீஸ் எடுத்த அதிரடி தடுப்பு நடவடிக்கைகள் காரணமாகவும், சென்னையில் கடந்த 2019-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் முடிந்துபோன 2020-ம் ஆண்டில் குற்ற சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளன.
அதுபற்றிய ஒரு ஆய்வு போலீஸ் தரப்பில் நேற்று வெளியிடப்பட்டது. அதன் விவரம் வருமாறு:-
கொலை வழக்குகள்
2019-ம் ஆண்டில் 173 கொலை குற்றங்கள் நடந்துள்ளன. 2020-ல் கொலை வழக்குகள் 147. 26 கொலை சம்பவங்கள் குறைந்துள்ளன. வழக்குப்பதிவு செய்யப்பட்ட 147 கொலைக்குற்றங்களிலும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சங்கிலி பறிப்பு சம்பவங்கள் 2019-ல் 310 நடந்துள்ளன. 2020-ல் 246 சம்பவங்களே நடந்துள்ளன. போதைப்பொருள் சம்பந்தப்பட்ட வழக்குகள் 2020-ம் ஆண்டில் மிகவும் அதிகமாக 522 வழக்குகள் பதிவாகியுள்ளது. 2,966 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 2019-ம் ஆண்டை பொறுத்தவரையில் போதைப்பொருள் சம்பந்தமாக 452 வழக்குகள் போடப்பட்டு, 1,128 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
செல்போன் பறிப்பு வழக்குகள் 2020-ம் ஆண்டில் 938 பதிவு செய்யப்பட்டு, 2,834 செல்போன்கள் மீட்டு கொடுக்கப்பட்டுள்ளன. கணினி வழி குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.1.52 கோடி மீட்டு கொடுக்கப்பட்டுள்ளது. வீடியோ கால் வழியாக சென்னை போலீஸ் கமிஷனரிடம் 996 புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 849 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
விபத்து வழக்குகள்
இதேபோல விபத்து உயிரிழப்புகளும் குறைந்துள்ளன. 2019-ம் ஆண்டு 1,229 ஆக இருந்த விபத்து உயிரிழப்புகள், 2020-ம் ஆண்டில் 839 என, 33 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. 2020-ம் ஆண்டில் 542 சமூக விரோதிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 2,560 பிடிவாரண்டுகள் செயலாக்கம் செய்யப்பட்டுள்ளன. 123 குற்றவாளிகளுக்கு அளிக்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story