கர்நாடகத்தில் ஆட்சி தலைமை மாற்றமா? முதல்-மந்திரி எடியூரப்பா பதில்
கர்நாடகத்தில் ஆட்சி தலைமை மாற்றப்படுமா? என்ற கேள்விக்கு முதல்-மந்திரி எடியூரப்பா பதிலளித்துள்ளார்.
பெங்களூரு,
முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
5,728 கிராம பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் 3,800 கிராம பஞ்சாயத்துகளில் பா.ஜனதா ஆதரவாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அதாவது மொத்த கிராம பஞ்சாயத்துகளில் 60 சதவீத இடங்களில் பா.ஜனதா ஆதரவு வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். மத்திய-மாநில அரசுகள் விவசாயிகளுக்கு ஆதரவான வேளாண் சட்டங்களை கொண்டு வந்துள்ளது. அந்த சட்டங்களை ஆதரிக்கும் எண்ணத்தை கிராமப்புற மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
விவசாயிகளின் வருமானத்தை வருகிற 2022-ம் ஆண்டுக்குள் 2 மடங்காக உயர்த்த பிரதமர் மோடி இலக்கு நிர்ணயித்து, அதற்காக பல்வேறு திட்டங்களை அவர் அமல்படுத்தி வருகிறார். விவசாயிகளின் நலனுக்காகவே பிரதமர் வேளாண் சட்டங்களில் திருத்தம் கொண்டு வந்துள்ளார். விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை எங்கு வேண்டுமானாலும் விற்பனை செய்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது விவசாயிகளுக்கு பயன் அளிக்கும்.
விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கும் நடைமுறை ரத்து செய்யப்படாது. அது தொடர்ந்து இருக்கும். இதை டெல்லியில் போராட்டம் நடத்துபவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளுடன் போட்டி போட சில சட்டங்களில் திருத்தங்களை கொண்டு வர வேண்டியது அவசியம். சில எதிர்க்கட்சிகள் மோடியின் இந்த திட்டங்களை விமர்சிக்கின்றன. இதன் மூலம் விவசாயிகளை எதிர்க்கட்சிகள் திசை திருப்புகின்றன.
எதிர்க்கட்சிகள் மோடியை வேண்டுமானாலும் குறை சொல்லலாம். ஆனால் தொலைநோக்கு பார்வையில் அவர் கொண்டு வரும் திட்டங்களை விமர்சிக்க முடியாது. கிசான் திட்டம், ஜெகஜீவன் திட்டம் ஏழை மக்களுக்கு ஓய்வூதிய திட்டம், வறுமை ஒழிப்பு திட்டங்களை அமல்படுத்தும் பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது. மோடியின் தொலைநோக்கு திட்டங்களை பார்த்து, விவசாயிகள் தங்களின் போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும்.
நாடு முழுவதும் நடைபெற்ற தேர்தல்களில் பா.ஜனதாவே வெற்றி பெற்றுள்ளது. கர்நாடகத்திலும் கடந்த 2019-ம் ஆண்டு 15 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 12-ல் பா.ஜனதா வெற்றி பெற்றது. ஆர்.ஆர்.நகர், சிரா ஆகிய தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலிலும் எங்கள் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முன்பு பா.ஜனதா வெற்றியே பெற முடியாத தொகுதிகளிலும் தற்போது நாங்கள் வெற்றி பெற்று எங்களின் பலத்தை நிரூபித்துள்ளோம்.
கொரோனா நெருக்கடி நேரத்திலும் வளர்ச்சி என்ற சக்கரம் நிற்காமல் சுற்றுவதை நாங்கள் உறுதி செய்துள்ளோம். பிரதமர் மோடியின் வழிகாட்டுதலில் கொரோனாவை நாங்கள் வெற்றிகரமாக கட்டுப்படுத்தியுள்ளோம். கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பிரச்சினையை சரியான முறையில் கையாண்டு இருக்கிறோம். விவசாயிகள், ஆட்டோ டிரைவர்கள், தொழிலாளர்களுக்கு நிவாரண நிதி உதவியை வழங்கி அவர்களின் நலனை நாங்கள் காத்துள்ளோம்.
கொரோனா நெருக்கடி நிலையிலும் நாங்கள் வியாபார நடவடிக்கைகளை அனுமதித்தோம். இதற்கு அன்னிய நேரடி முதலீடுகள் அதிகளவில் வந்ததே உதாரணம். ரூ.1.54 லட்சம் கோடி மதிப்பீட்டில் 90 தொழில் திட்டங்கள் கர்நாடகத்திற்கு வந்துள்ளன. பெங்களூருவின் வளர்ச்சிக்கு பெங்களூரு மிஷன் திட்டத்தை செயல்படுத்துகிறோம். இன்னும் ஓரிரு ஆண்டுகளில் பெங்களூருவின் வரைபடமே மாற்றும் வகையில் திட்டங்களை நீங்கள் பார்க்க போகிறீர்கள்.
நாட்டிலேயே பெங்களூருவை முன்மாதிரி நகரமாக மாற்றுவோம். ஜோக் நீர்வீழ்ச்சி உள்ளிட்ட முக்கியமான சுற்றுலா தலங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். வளர்ச்சி பட்டியலில் கர்நாடகத்தை ஒரு படி மேலே கொண்டு செல்வது தான் எனது நோக்கம். என்னை மாற்றுவது குறித்த செய்திகளை பற்றி நான் கவலைப்படுவது இல்லை. நான் வளர்ச்சி மற்றும் நிர்வாக பணிகளை மட்டுமே மேற்கொண்டு வருகிறேன். பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் அருண்சிங், கர்நாடகத்தில் ஆட்சி தலைமையை இன்னும் 3 ஆண்டுகளுக்கு மாற்றும் பேச்சுக்கு இடமில்லை என்று கூறியுள்ளார். அதனால் அதைபற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும்?. இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
Related Tags :
Next Story