வைரஸ் பரவலால் மூடப்பட்டு இருந்தன கர்நாடகத்தில் 9 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் இன்று முதல் திறப்பு
கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 9 மாதங்களுக்கு பிறகு இன்று (வெள்ளிக்கிழமை) பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதையொட்டி பள்ளிகளில் கொரோனா தடுப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
பெங்களூரு,
கர்நாடகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் கொரோனா பரவல் தொடங்கியது. இதையடுத்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. மேலும் இந்த கல்வி ஆண்டில் ஆன்-லைன் மூலம் மாணவ-மாணவிகளுக்கு பாடம் கற்றுக்கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து கர்நாடகத்தில் பள்ளி, பி.யூ.சி. கல்லூரிகளை திறக்க கர்நாடக அரசு முடிவு செய்தது. அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) முதல் கர்நாடகத்தில் 10-ம் வகுப்பு, பி.யூ.சி. 2-ம் ஆண்டுகள் வகுப்புகள் திறக்கப்படுகிறது.
இதையொட்டி பள்ளி, பி.யூ.சி. கல்லூரிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது பள்ளிகளில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து மாணவ-மாணவிகள் அமரும் வகையில் இருக்கைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதுபோல் கிருமிநாசினி தெளித்தும் பள்ளி வகுப்பறைகள் தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும் முகக்கவசம் அணிந்து மாணவர்கள் பள்ளி, கல்லூரிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
9 மாதங்களுக்கு பிறகு கர்நாடகத்தில் திட்டமிட்டப்படி பள்ளிகள் நாளை (இன்று) திறக்கப்படுகிறது. 10-ம் வகுப்பு மற்றும் பி.யூ.கல்லூரி 2-ம் ஆண்டு வகுப்புகள் தொடங்கப்படுகிறது. 6 முதல் 9-ம் வகுப்பு வரை வித்யாகம வகுப்புகள் தொடங்கப்பட இருக்கின்றன. வித்யாகம திட்டத்தில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் இந்த வகுப்புகள் நடைபெறும். இந்த வகுப்புகள் பள்ளி வளாகத்தில் நடைபெறும். விருப்பம் உள்ள குழந்தைகள் மட்டும் பள்ளிக்கு வரலாம். பள்ளிக்கு மாணவர்கள் வருவது கட்டாயமல்ல.
பள்ளிக்கு வரும் குழந்தைகள் பெற்றோரின் ஒப்புதல் கடிதத்தை கொண்டுவர வேண்டும். ஆதங்கம் உள்ள பெற்றோர் தங்களின் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தேவை இல்லை. பள்ளிகளில் கொரோனா பரவுவதை தடுக்க தேவையான அனைத்து வகையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன. 10-ம் வகுப்பு மற்றும் பி.யூ.கல்லூரி 2-ம் ஆண்டு வகுப்பு தேர்வுகள் மார்ச் மாதம் நடத்த மாட்டோம். மாணவர்களுக்கு உரிய காலஅவகாசம் வழங்கப்படும். இந்த முறை அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும். தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெறும் முடிவை எடுக்க மாட்டோம். இந்த விஷயத்தில் அரசு தெளிவாக உள்ளது.
9 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. கர்நாடகத்தில் புதிய வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. அதன் வீரியம் குறைவாக உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். அதனால் யாரும் பயப்பட தேவை இல்லை என்று சுகாதாரத்துறை கூறியுள்ளது. அதனால் பெற்றோர் தங்களின் குழந்தைகளை தைரியமாக பள்ளிக்கு அனுப்ப வேண்டும். அவர்களின் பாதுகாப்பை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். சளி, காய்ச்சல், இருமல் இருந்தால் குழந்தைகள் பள்ளிக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.
குழந்தைகளின் கல்வி எதிர்காலத்தை விட அவர்களின் உடல் நலன் மிக முக்கியம். பள்ளிகளில் குழந்தைகளின் உடல்நிலை குறித்து பரிசோதனை நடத்தப்படுகிறது. பள்ளி வகுப்பறைகள் மற்றும் வளாகங்கள் சானிடைசர் திரவம் கொண்டு தூய்மையாக்கப்பட்டு உள்ளது. குழந்தைகளின் உடல் நலனை கண்காணிக்க அனைத்து பள்ளிகளிலும் ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளார். கொரோனா அறிகுறி தென்பட்டால், அத்தகைய குழந்தைகள் தனி அறையில் வைத்து அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
2020-ம் ஆண்டு கொரோனா வருடமாக இருக்கும் நிலையில், 2021-ம் ஆண்டு கொரோனாவை எதிர்கொள்ளும் ஆண்டாக இருக்கும். மாணவர்கள் கும்பலாக ஒரு இடத்தில் சேர அனுமதி இல்லை. மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது, அவர்களின் உடல் வெப்பநிலை சோதிக்கப்படும். அவர்களுக்கு சானிடைசர் திரவம் வழங்கப்படும். அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசுக்கு பெற்றோரின் ஒத்துழைப்பு மிக முக்கியம். மாணவர்கள் வீட்டில் இருந்தே குடிநீர் கொண்டு வர வேண்டும். இறைவணக்க பிரார்த்தனை அந்தந்த வகுப்பறைகளிலேயே நடைபெறும்.
அந்தந்த பகுதி மக்கள் பிரதிநிதிகள் பள்ளிகளை திறக்க தேவையான உதவிகளை செய்வார்கள். 10-ம் வகுப்பு மற்றும் பி.யூ.கல்லூரி 2-ம் ஆண்டு வகுப்புகளை தொடர்ந்து பிற வகுப்புகளையும் தொடங்குவது குறித்து முதல்-மந்திரியுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு சுரேஷ்குமார் கூறினார்.
Related Tags :
Next Story