சங்கரன்கோவில் அருகே பரபரப்பு: மோட்டார் சைக்கிள் திருடிய போலீஸ்காரர் அதிரடி கைது; பெண்ணிடம் அத்துமீறிய வழக்கில் சிக்கியவர்
சங்கரன்கோவில் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய போலீஸ்காரர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இவர் பெண்ணிடம் அத்துமீறிய வழக்கில் சிக்கியவர் ஆவார்.
மோட்டார் சைக்கிள் திருட்டு
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பெரிய கோவிலான்குளத்தைச் சேர்ந்தவர் ெபரியசாமி. இவருடைய மகன் நம்பிராஜன். இவர் பக்கத்து ஊரான நடுவக்குறிச்சியில் ஓட்டல் நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று இரவில் இவர் தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். இதனை நோட்டமிட்ட மர்மநபர் நள்ளிரவில் நைசாக நம்பிராஜனின் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றார். இதுகுறித்த புகாரின்பேரில், சின்ன கோவிலாங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
போலீஸ்காரர் கைது
இதற்கிடையே, குருக்கள்பட்டியில் திருட்டு மோட்டார் சைக்கிளை விற்க முயன்றவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். இந்த விசாரணையில், அவர் சங்கரன்கோவில் அருகே சில்லிகுளத்தைச் சேர்ந்த முத்துபாண்டியன் மகன் ராமச்சந்திரன் (வயது 28) என்பதும், நம்பிராஜனின் மோட்டார் சைக்கிளை திருடி விற்க முயன்றதும் தெரிய வந்தது.
இதையடுத்து ராமச்சந்திரனை போலீசார் அதிரடியாக கைது செய்து, மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
கைதான ராமச்சந்திரன், நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு பட்டாலியன் 9-வது பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றினார்.
பெண்ணிடம் அத்துமீறியவர்
இவர் கடந்த 5-ந்தேதி விடுமுறைக்காக தனது சொந்த ஊருக்கு சென்றபோது, சங்கரன்கோவில் பஸ் நிலையத்தில் இருந்த நரிக்குறவ இளம்பெண்ணிடம் அத்துமீறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அந்த பெண்ணின் கணவரான மாற்றுத்திறனாளியையும் தாக்கினார்.
உடனே அங்கு வந்த சங்கரன்கோவில் போலீசார், மதுபோதையில் இருந்த ராமச்சந்திரனை பஸ்சில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்ைப ஏற்படுத்தியது. இதனை தாமாக முன்வந்து விசாரித்த மதுரை ஐகோர்ட்டு, இதுதொடர்பாக தமிழக உள்துறை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி. பதில் அளிக்க உத்தரவிட்டனர். இதையடுத்து நரிக்குறவ பெண்ணின் கணவர் அளித்த புகாரின்பேரில், ராமச்சந்திரனை போலீசார் கைது செய்து, பின்னர் ஜாமீனில் விடுவித்தனர். தொடர்ந்து போலீஸ்காரர் ராமச்சந்திரன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் போலீஸ்காரர் ராமச்சந்திரனை சின்ன கோவிலாங்குளம் போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பரபரப்பு
ஏற்கனவே, கூடங்குளம் போலீஸ் நிலையத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய வழக்கில் நேற்றுமுன்தினம் பெண் போலீஸ் கிரேசியா அவரது கணவருடன் கைது செய்யப்பட்ட நிலையில் மற்றொரு போலீஸ்காரர் மோட்டார் சைக்கிள் திருட்டில் கைதான சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story