பிளாஸ்டிக் பையில் பெண் உடல் மீட்பு வழக்கில் தலைமறைவாக இருந்த மாமனார் கைது நடத்தையில் சந்தேகப்பட்டு கொன்றதாக வாக்குமூலம்


பிளாஸ்டிக் பையில் பெண் உடல் மீட்பு வழக்கில் தலைமறைவாக இருந்த மாமனார் கைது நடத்தையில் சந்தேகப்பட்டு கொன்றதாக வாக்குமூலம்
x
தினத்தந்தி 1 Jan 2021 7:07 AM IST (Updated: 1 Jan 2021 7:07 AM IST)
t-max-icont-min-icon

பிளாஸ்டிக் பையில் பெண் உடல் மீட்கப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த மாமனாரை போலீசார் கைது செய்தனர். இவர் மருமகளின் நடத்தையில் சந்தேகப்பட்டு கொன்றதாக வாக்குமூலம் கொடுத்து உள்ளார்.

மும்பை, 

மும்பை மலாடு அக்சா கடற்கரையோரமாக பிளாஸ்டிக் பை ஒன்றில் இளம்பெண்ணின் உடல் கடந்த வாரம் போலீசாரால் மீட்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கொலையான பெண் நந்தினி என்ற நளினி (வயது22) என்பது தெரியவந்தது. இவருக்கும் காந்திவிலி பொய்சர் பகுதியை சேர்ந்த பங்கஜ் ராய் என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்து உள்ளது.

இந்தநிலையில் பங்கஜ் ராய் வேலை விஷயமாக சொந்த ஊருக்கு சென்றிருந்ததால் வீட்டில் நளினி மாமனாரான கமல்ராய் (55) என்பருடன் இருந்து வந்தார். இதற்கிடையில் கமல்ராய் சொந்த ஊருக்கு சென்றதால் வீட்டில் நளினி தனியாக இருப்பதாக கருதி பெற்றோர் தேடி வீட்டிற்கு வந்தனர். அங்கு நளினி வீட்டில் இல்லாததால் பல இடங்களில் தேடினர். எங்கும் கிடைக்காமல் போனதால் பெற்றோர் போலீசில் புகார் அளித்து இருந்தனர்.

அப்போது தான் நளினி பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. மேலும் மாமனார் கமல்ராய் தலைமறைவாகி இருந்ததால் அவர் தான் கொலை செய்து விட்டு தப்பி சென்றதாக போலீசார் கருதினர். இருப்பினும் அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் மும்பை வந்த கமல்ராயை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

மருமகளான நளினி தனது மகனிடம் சந்தோஷமாக இருந்ததில்லை எனவும், இதனால் நளினி மீது மாமனார் கமல்ராய்க்கு நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது.

இதனால் சம்பவத்தன்று கமல்ராய், நளினியின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். இதனை தொடர்ந்து ஆட்டோ டிரைவர்களான கிருஷ்ணா குமார் சிங், பிரதீப் குப்தா ஆகியோரின் உதவியுடன் உடலை பிளாஸ்டிக் பையில் போட்டு காந்திவிலி கழிமுக கால்வாயில் வீசி சென்று உள்ளார். அங்கு மிதந்த உடல் அக்சா கடற்கரைக்கு வந்து சேர்ந்ததாக தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் கமல்ராயை கைது செய்தனர். மேலும் கொலைக்கு உடந்தையாக செயல்பட்ட ஆட்டோ டிரைவர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story