மத்திய அரசு அறிவிப்பு மராட்டியம் உள்பட நாடு முழுவதும் நாளை கொரோனா தடுப்பூசி ஒத்திகை மும்பை, தானேயில் ஏற்பாடுகள் தீவிரம்
மராட்டியம் உள்பட நாடு முழுவதும் நாளை கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற உள்ளது. மும்பை, தானே, புனேயில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
புதுடெல்லி,
உலகையே தன் ஆளுகையின்கீழ் கொண்டு வந்துள்ள கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக நாடு ஓராண்டு காலமாக போராடிக்கொண்டிருக்கிறது.
இந்த போராட்டத்தினால் வைரஸ் பரவல் குறைந்திருக்கிறது. உயிரிழப்பும் பரவலாக கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.
தொடர் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை, ஒவ்வொரு நாளும் வீழ்ச்சி அடைந்து வருகிறது. இது, கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் நாம் பெற்று வருகிற நல்ல பலன்களாகும்.
இந்த நிலையில் கொரோனா வைரசுக்கு நிரந்தரமாக விடை கொடுப்பதில் தடுப்பூசிக்குத்தான் முக்கிய பங்கு உண்டு. அந்த வகையில் உள்நாட்டில் கோவேக்சின், ஜைகோவ்-டி போன்ற தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு அவை இறுதிக்கட்ட மருத்துவ சோதனையில் உள்ளன.
இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் கூட்டாக உருவாக்கி, இந்தியாவில் புனேயின் இந்திய சீரம் நிறுவனம் தயாரித்து வழங்கும் கோவிஷீல்டு தடுப்பூசியும் இறுதிக்கட்டத்தில் உள்ளது.
புத்தாண்டில் இந்தியாவில் முன்னுரிமை அடிப்படையில், டாக்டர்கள், சுகாதார பணியாளர்கள், மூத்த குடிமக்கள் என 30 கோடி பேருக்கு முதல் கட்டமாக தடுப்பூசி செலுத்த மத்திய அரசு முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது.
ஓரிரு நாளில் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியின் அவசர பயன்பாட்டுக்கு இந்தியாவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுவிடும் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு மத்தியில் இணையவழியில் நேற்று நடந்த கருத்தரங்கில் இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி வி.ஜி.சோமானி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், ‘‘மிக முக்கிய விஷயம் என்னவென்றால், தொழில் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் சோதனையான இந்த தருணத்தில் இணைந்து நிற்கின்றன. நம் கையில் ஏதோ ஒன்றைக் (தடுப்பூசி) கொண்டு, இந்த புத்தாண்டு மகிழ்ச்சியான புத்தாண்டாக அமையும். அதைத்தான் இப்போது நான் குறிப்பால் உணர்த்த முடியும்’’ என குறிப்பிட்டார். எனவே புத்தாண்டு பரிசாக தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்து விடும் என்ற எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.
பஞ்சாப், அசாம், ஆந்திரா, குஜராத் ஆகிய 4 மாநிலங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக கொரோனா தடுப்பூசி ஒத்திகை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.
அதைத்தொடர்ந்து நேற்று தலைநகர் டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தலைமையில் உயர்மட்டக்குழு கூட்டம் காணொலி காட்சி வழியாக நடந்தது.
மாநில சுகாதாரத்துறை செயலாளர்கள், தேசிய சுகாதார திட்ட இயக்குனர்கள், சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அதில் கொரோனா வைரஸ் தடுப்பூசி போடும் திட்டத்தை எப்படி நிறைவேற்றுவது, அதற்கான ஆயத்த பணிகள் எவ்வாறு நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன என்பவை போன்ற விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.
இந்த கூட்டம் முடிந்ததும், மத்திய சுகாதார அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் அனைத்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் 2-ந்தேதி (நாளை) ஒரே நேரத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாநில தலைநகரங்களிலும் குறைந்தது 3 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை நடத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
சில மாநிலங்களில் கடினமான நிலப்பரப்பு, மோசமான தளவாட வசதியை எதிர்கொள்வதற்காக தலைநகர் தவிர்த்து உள் நகரங்களிலும் ஒத்திகை நடத்த வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மராட்டியம், கேரளா போன்ற மாநிலங்களில் உள்நகரங்களில் ஒத்திகை நடத்தப்படும்.
இந்த தடுப்பூசி ஒத்திகையின் நோக்கம், தடுப்பூசி தொடர்பான பணிகளுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள கோ-வின் தளத்தின் பயன்பாடு எப்படி உள்ளது என அறிதல், திட்டமிடல் மற்றும் அதை செயல்படுத்துதலில் உள்ள தொடர்புகளை மதிப்பிடுதல், சவால்களை அடையாளம் காணுதல் உள்ளிட்டவை ஆகும். மேலும், பல்வேறு மட்டத்தில் உள்ள திட்ட மேலாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை நிறைவாக செய்து முடித்து விடலாம் என்ற நம்பிக்கையை இந்த ஒத்திகை உருவாக்கும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
தடுப்பூசி ஒத்திகை நடக்கிற 3 இடங்கள், ஒவ்வொன்றிலும் சம்பந்தப்பட்ட மருத்துவ பொறுப்பு அதிகாரி, ஒத்திகைக்கான 25 பயனாளிகளை (சுகாதார பணியாளர்களை) அடையாளம் காண்பார். இவர்கள் பற்றிய தகவல்கள் கோ-வின் தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். அடையாளம் காணப்பட்ட நபர்கள் ஒத்திகை நடைபெறும் இடத்தில் வரவழைக்கப்பட்டு இருப்பார்கள்.
ஒத்திகை நடைபெறும் இடங்களில் போதுமான இட வசதி இருக்கிறதா, தளவாட ஏற்பாடுகள் உள்ளனவா, இணையதள வசதி உள்ளதா, மின்சார வினியோகம் சீராக உள்ளதா, பாதுகாப்பு அம்சங்கள் சரியாக உள்ளனவா என்பதை மாநில அரசுகளும், யூனியன் பிரதேச நிர்வாகங்களும் உறுதி செய்ய வேண்டும்.
ஒத்திகை நடைபெறும் இடங்களில் உள்ளே வரவும், வெளியே செல்லவும் தனித்தனி வாயில்கள், மூன்று அறை வசதி, விழிப்புணர்வு செயல்பாடுகளுக்காக போதுமான இட வசதி இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். சுகாதார கள பணியாளர்களுக்கான ஐ.இ.சி. என்னும் தகவல், கல்வி, தொடர்பு சாதனங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கவேண்டும். அனைத்து வழிகாட்டும் நெறிமுறைகளும் பின்பற்றப்பட வேண்டும்.
இந்த ஒத்திகை, தடுப்பூசி வழங்கல், சேமிப்பு, குளிர்சங்கிலி மேலாண்மை உள்ளிட்ட தளவாடங்களை நிர்வகிப்பதில் மாநில மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்களை தயார்படுத்தும்.
இதற்காக 96 ஆயிரம் தடுப்பூசி செலுத்துனர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நாளை நடைபெற உள்ள தடுப்பூசி ஒத்திகைக்கான சிறப்பு ஏற்பாடுகளை மாநில அரசுகளும், யூனியன் பிரதேச நிர்வாகங்களும் முழுவீச்சில் செய்து வருகின்றன.
மராட்டியத்திலும் கொரோனா தடுப்பூசி ஒத்திகைக்காக மாநில அரசு விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறது. குறிப்பாக மும்பை, தானே, பால்கர், புனேயில் ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்பு நிர்வாகம் செய்து வருகின்றன. ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே கேட்டறிந்து வருகிறார்.
Related Tags :
Next Story