திருச்சியில் 2-ம் நாள் சுற்றுப்பயணம்: ஸ்ரீரங்கம் தொகுதியை ஜெயலலிதா கோட்டை என மீண்டும் நிரூபிப்போம் எடப்பாடி பழனிசாமி உறுதி


திருச்சியில் 2-ம் நாள் சுற்றுப்பயணம்: ஸ்ரீரங்கம் தொகுதியை ஜெயலலிதா கோட்டை என மீண்டும் நிரூபிப்போம் எடப்பாடி பழனிசாமி உறுதி
x
தினத்தந்தி 1 Jan 2021 7:33 AM IST (Updated: 1 Jan 2021 7:33 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீரங்கம் தொகுதியை ஜெயலலிதாவின் கோட்டை என மீண்டும் நிரூபிப்போம் என எடப்பாடி பழனிசாமி உறுதிபட தெரிவித்தார்.

திருச்சி,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருச்சி மாவட்டத்தில் நேற்று 2-ம் நாளாக தனது தேர்தல் பிரசாரத்தை ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் தொடங்கினார். ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு அமைக்கப்பட்டிருந்த மேடையில் நின்றபடி எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சி தலைவி ஜெயலலிதா ஆகிய தெய்வங்களையும், ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியிருக்கும் ரெங்கநாதரை வணங்கியும் பிரசாரத்தை தொடங்குகிறேன். ஜெயலலிதா வென்ற இந்த ஸ்ரீரங்கம் தொகுதிக்கு நிறைய வரலாற்றுச்சிறப்புகள் உள்ளன. இந்த மண்ணை விட்டு மறைந்தாலும், ஜெயலலிதா செய்த சாதனைகள் அவருக்கு புகழ் சேர்த்து கொண்டிருக்கிறது. இந்த தொகுதியில் அவர் வெற்றி பெற்று முதல்-அமைச்சர் நாற்காலியில் அமர நீங்களெல்லாம் துணைநின்ற இந்த வரலாற்றுச்சிறப்பு மிக்க இடத்தில் நானும் முதல்-அமைச்சராக நின்று பேசுவதற்கு வாய்ப்பு அளித்த இறைவனுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

ரூ.2 ஆயிரம் கோடி

ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதிக்கு பல திட்டங்களைத் தந்தார். கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரூ.100 கோடியில் பாலம் கட்டினார். வண்ணத்துப்பூச்சி பூங்காவை கொண்டு வந்தார். ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி டி.என்.பி.எல். தொழிற்சாலையை உருவாக்கி அதன் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தந்தார்.

ஜெயலலிதாவின் இந்த அரசானது ஆலையை மேலும் விரிவாக்கம் செய்ய ரூ.2 ஆயிரம் கோடி திட்ட மதிப்பீடு எடுத்திருக்கிறது. அதுமட்டுமல்ல, திருச்சிக்கு தேசிய சட்டக்கல்லூரி, தோட்டக்கலை கல்லூரி, திருவானைக்காவலில் மேம்பாலம் ஆகியவற்றை கொண்டு வந்தவர் ஜெயலலிதா.

4 மாதத்தில் அணை செயல்படும்

முக்கொம்பு மேலணையில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கதவணை உடைந்ததால், அங்கு புதிய தடுப்பணை துரிதமாக கட்டி வருகிறோம். இன்னும் 4 மாதங்களில் புதிய தடுப்பணை செயல்பாட்டுக்கு வரும்.

இந்த தொகுதியில்தான் யாத்ரிகர்களுக்காக யாத்ரி நிவாஸ் கட்டப்பட்டுள்ளது. இப்படி பல திட்டங்களை கொண்டு வந்து ஸ்ரீரங்கத்தை முன்மாதிரி தொகுதியாக விளங்க அடித்தளமிட்டவர் ஜெயலலிதா. வளர்ச்சியும், செழிப்பும், அடிப்படை வசதிகளும் நிறைந்த இந்த தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளரை இரட்டை இலை சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யுங்கள்.

மீண்டும் ஜெயலலிதாவின் கோட்டை

வருகிற 2021 சட்டமன்ற தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியை மீண்டும் ஜெயலலிதாவின் கோட்டை என்பதை நிரூபித்து காட்டுவோம். தொடர்ந்து ஜெயலலிதாவின் ஆட்சி தொடர பெரும்பான்மை இடங்கள் கிடைக்க ஸ்ரீரங்கம் தொகுதியில் வெற்றியை தாருங்கள்.

உங்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மற்றும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் நீங்கள் மகிழ்ச்சியாக தைப்பொங்கலை கொண்டாடுவதற்காக ஜெயலலிதாவின் அரசானது, ரூ.2,500 பொங்கல் பரிசுத்தொகையை அறிவித்துள்ளது. இதனை நீங்கள் ஒதுக்கப்பட்ட நேரத்தில் சென்று வாங்கி பெற்று மகிழ்ச்சியுடன் பொங்கல் திருநாளை கொண்டாடுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் மாநில எம்.ஜி.ஆர்.இளைஞரணி இணை செயலாளர் பொன்.செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story